வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.13 கோடி தங்க நகைகள் திருட்டு
வங்கியின் ஜன்னலை உடைத்து ரூ.13 கோடி தங்க நகைகள் திருட்டு
ADDED : அக் 29, 2024 08:00 AM

தாவணகெரே: தாவணகெரே, நாமதியின் நேரு சாலையில் எஸ்.பி.ஐ., வங்கிக்கிளை உள்ளது. வங்கிக்கு சனி, ஞாயிறு என, இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. வங்கி பூட்டப்பட்டிருந்தது. நேற்று காலை ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்தனர்.
கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறி கிடந்தன. லாக்கர் உடைபட்டிருந்தது. அதில் இருந்த 30 லட்சம் ரூபாய் ரொக்கம், 12.95 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பாக, வங்கி உயர் அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நாமதி போலீசார், ஆய்வு செய்தனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். நேற்று முன் தினம் நள்ளிரவோ அல்லது நேற்று அதிகாலையோ, மர்ம கும்பல் ஜன்னல் கம்பிகளை உடைத்து, உள்ளே புகுந்து திருடிச் சென்றுள்ளது.
வங்கியில் மூன்று லாக்கர்கள் உள்ளன. இரண்டு லாக்கர்களை உடைக்க முடியவில்லை. ஒன்றை மட்டும் காஸ் கட்டரால் உடைத்து, பணம், நகைகளை திருடிச் சென்றுள்ளனர். கண்காணிப்பு கேமராவின் பதிவு கருவியை கொண்டு சென்றுள்ளனர்.
தடயங்கள் கிடைக்காமல் இருக்க, மிளகாய் பொடியை துாவி உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இருந்து, வெகு தொலைவில் வங்கி உள்ளது. இதனால் திருட்டு நடந்தது தெரியவில்லை. வங்கிக்கு இரவு காவலாளியை நியமிக்கவில்லை. இது திருடர்களுக்கு வசதியாகிவிட்டது.
போலீசார் விசாரணையை துவங்கி உள்ளனர்.