கேரளாவில் நடைபாதையை அடைத்து பேனர்; சொந்த கட்சிக்கே அபராதம் விதித்த மேயர்
கேரளாவில் நடைபாதையை அடைத்து பேனர்; சொந்த கட்சிக்கே அபராதம் விதித்த மேயர்
ADDED : ஜன 25, 2026 07:07 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., முதல் முறையாக கைப்பற்றியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக, சொந்தக் கட்சிக்கே மாநகராட்சி மேயர் அபராதம் விதித்துள்ளார்.
கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது. மேயராக, அந்த கட்சியைச் சேர்ந்த ராஜேஷ் பதவியேற்றார். தமிழகத்துடன் விரைவில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள கேரளாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பயணம் மேற்கொண்டார். திருவனந்தபுரத்தில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், திரு வனந்தபுரம் மாநகராட்சி மேயர் ராஜேஷ் உள்ளிட்டோரையும் சந்தித்து பாராட்டினார்.
பிரதமரின் இந்த பயணத்தையொட்டி, திருவனந்தபுரம் பாலயம் ஜங்ஷன் பகுதியில் இருந்து புலிமூடு ஜங்ஷன் வரை பிரமாண்ட வரவேற்பு பதாகைகள், பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இவை, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் அமைக்கப் பட்டதாகக் கூறி, பா.ஜ., மாவட்ட தலைவர் காரமனா ஜெயன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி, திருவனந்தபுரம் மாநகராட்சி செயலர் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும், பா.ஜ., ஆளும் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில், மாவட்ட பா.ஜ., தலைமைக்கு 19.7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கேரளாவில் பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பதாகைகள் வைக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டு இருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில், சொந்தக் கட்சிக்கு எதிராகவே, பா.ஜ., ஆளும் மாநகராட்சி மேயர் நடவடிக்கை எடுத்துள்ளார். இது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரி யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

