போலி வழக்கறிஞர்கள் நீக்கம்: இந்திய பார் கவுன்சில் அதிரடி
போலி வழக்கறிஞர்கள் நீக்கம்: இந்திய பார் கவுன்சில் அதிரடி
ADDED : அக் 28, 2024 12:18 AM

சென்னை: டில்லியில், 107 போலி வழக்கறிஞர்களை நீக்கி, இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திய பார் கவுன்சில் செயலர் ஸ்ரீமந்தோ சென் வெளியிட்ட அறிவிப்பு:
உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட பார் கவுன்சில் மற்றும் உயர் அதிகாரம் கொண்ட குழுவின் தொடர்ச்சியான விசாரணைகள் வாயிலாக, போலி வழக்கறிஞர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
'பார் கவுன்சில் ஆப் இந்தியா' சான்றிதழ் விதிகளின் விதி 32, கடந்த ஆண்டு திருத்தப்பட்டது.
இந்த திருத்தம், சரிபார்ப்பு கட்டமைப்பை வலுப்படுத்தியதுடன், பி.சி.ஐ.,யை மிகவும் திறம்படவும், முறையாக அடையாளம் காணவும் அனுமதிக்கிறது.
அதாவது, தகுதியற்ற, போலி வழக்கறிஞர்களை அடையாளம் கண்டு, அவர்களை பதிவில் இருந்து நீக்க, இந்த திருத்தம் அனுமதிக்கிறது.
கடந்த 2019 -- 2023 ஜூன் 23க்கு இடையில், பல ஆயிரம் போலி வழக்கறிஞர்கள் நீக்கப்பட்டனர்.
அவர்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த முழுமையான விசாரணைக்கு பின், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கறிஞர் தொழிலில் நேர்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்திய பார் கவுன்சில், 2019ம் ஆண்டு முதல், டில்லியில் உள்ள வழக்கறிஞர்கள் பட்டியலில் இருந்து, 107 போலி வழக்கறிஞர்களை நீக்கிஉள்ளது.
தங்கள் மோசடி வெளிப்படுமோ என்ற அச்சத்தில், தங்கள் பதிவு சான்றிதழை முன்கூட்டியே பலர் ஒப்படைத்து உள்ளனர்.
அனைத்து மாநில பார் கவுன்சில்களும், இது போன்ற சரணடைதல்களை ஏற்கும்போது, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
போலி வழக்கறிஞர்கள், அவர்களின் செயல்களுக்கு பொறுப்பேற்காமல், விலகிச் செல்ல அனுமதிக்கக் கூடாது.
ஏனெனில், அவர்களின் ஏமாற்று செயல், பொது மக்களுக்கு தீங்கு விளைவிக்கும்; நீதி அமைப்பை சமரசம் செய்து கொள்வது போல் ஆகிவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

