அஜித் பவார் பயணித்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? நேரில் பார்த்தவர் வெளியிட்ட புதிய தகவல்
அஜித் பவார் பயணித்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது? நேரில் பார்த்தவர் வெளியிட்ட புதிய தகவல்
UPDATED : ஜன 28, 2026 03:09 PM
ADDED : ஜன 28, 2026 03:01 PM

பாராமதி: அஜித் பவார் சென்ற விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் விளக்கி உள்ளார்.
மும்பையில் இருந்து பாராமதிக்கு மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் சென்ற தனி விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் மற்றும் அவருடன் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கு பனி மூட்டம் காரணமாக இருக்கும் என்று கூறப்படும் நிலையில், விபத்தில் சந்தேகம் உள்ளது, விசாரணை தேவை என்று மம்தா பானர்ஜி போன்ற தலைவர்களும் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் பல தகவல்களை வெளியிட்டு உள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி விவரம்;
நாங்கள் இங்கேதான் (விபத்து நிகழ்ந்த பகுதிக்கு அருகில்) வசிக்கிறோம். எங்களின் இருப்பிடங்களுக்கு பின்னால் தான் விமான ஓடுபாதை உள்ளது. அங்கே ஒரு விமானம் வந்தது, தரையிறங்க முயன்றதை கண்டோம். தரையிறங்காமல் மேலே எழும்பி பறந்தது. பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்க முற்பட்டது.
அதன் பின்னர் ஓடுபாதைக்கு சற்று முன்னர் விபத்துக்குள்ளானது. அதை கண்டவுடன் நாங்கள் ஓடுபாதையை சுற்றியுள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்தோம். உடடினயாக போலீசாரும், மற்றவர்களும் அங்கே ஓடி வந்தனர். அங்கு பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் 15 நிமிடங்களுக்கு பின்னரே தீயை அணைக்க முடிந்தது.
நாங்கள் அருகில் சென்ற போது தலை இல்லாத ஒரு சடலம் அங்கே கிடந்தததைக் கண்டோம். அது முற்றிலும் எரிந்து சிதைந்து போயிருந்தது. எங்களால் அதை அடையாளம் காண முடியவில்லை. அந்த சடலத்தின் கையில் இருந்த பொருளை கண்டு அடையாளம் கண்டு கொண்டோம். சடலம் தாதா(அஜித் பவாரை ஊர் மக்கள் தாதா என்றுதான் செல்லமாகவும், பிரியமாகவும் அழைப்பது வழக்கம்)வின் உடையது என்பதை அடையாளம் கண்டோம்.
போலீசார் உடனடியாக எங்களிடம் வந்து தண்ணீர் கேட்டனர். நாங்களும் கொடுத்தோம். சடலத்தை மூடுவதற்கு துணிகளையும் கேட்டார்கள், எங்கள் வீட்டில் இருந்த புதிய போர்வை ஒன்றை கொடுத்தோம்.
இவ்வாறு அந்த பெண் கூறினார்.

