கர்நாடக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ.100 கோடி பேரம்! மத்திய அமைச்சர்கள் மீது காங்., ரவி கனிகா குற்றச்சாட்டு
கர்நாடக அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ.,க்களிடம் ரூ.100 கோடி பேரம்! மத்திய அமைச்சர்கள் மீது காங்., ரவி கனிகா குற்றச்சாட்டு
ADDED : ஆக 25, 2024 10:34 PM

மாண்டியா:
''கர்நாடக காங்கிரஸ் அரசை கவிழ்க்க, எம்.எல்.ஏ.,க்களிடம் 100 கோடி ரூபாய் தருவதாக பேரம் பேசுகின்றனர். அரசை கவிழ்க்கும் முயற்சியில், மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி, ஷோபா, பா.ஜ., தேசிய பொது செயலர் சந்தோஷ் ஈடுபட்டு உள்ளனர்,'' என்று, மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகா பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
கர்நாடகா சட்டசபைக்கு கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தது. காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்று, தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையா உள்ளார். ஐந்து வாக்குறுதி திட்டங்களுக்கு, அரசு நிதி ஒதுக்குவதால், தங்கள் தொகுதியில் வளர்ச்சி பணிகள் செய்ய நிதி கிடைப்பது இல்லை என்று, அரசு மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அதிருப்தியில் உள்ளனர்.
அதிருப்தியில் இருக்கும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை தங்கள் பக்கம் இழுத்து, அரசை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ., ஈடுபடுவதாக, கடந்த ஆண்டே குற்றச்சாட்டு எழுந்தது.
சுதாரித்து கொண்ட முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.
கூட்டு சதி
இந்நிலையில் முதல்வர் மீது எழுந்து உள்ள, 'மூடா' முறைகேடு குறித்து, விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார். கவர்னரை வைத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சி நடப்பதாக, அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
ஆலோசனை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன், டில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, 'நமது ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றனர்' என்று கூறிவிட்டு வந்தனர்.
இந்நிலையில், மாண்டியா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரவி கனிகா நேற்று அளித்த பேட்டி:
எங்கள் அரசை கவிழ்க்க, பா.ஜ., 'ஆப்பரேஷன் தாமரை'யை கையில் எடுத்து உள்ளது. எங்கள் எம்.எல்.ஏ.,க்களிடம் மொபைல் போனில் பேசுபவர்கள், உங்களுக்கு 100 கோடி ரூபாய் தருகிறோம். பா.ஜ., பக்கம் வந்து விடுங்கள் என்று பேரம் பேசுகின்றனர். எனக்கும் கூட அப்படி ஒரு அழைப்பு வந்தது. அமலாக்கத் துறையில் புகார் செய்வேன் என்று கூறினேன். பின், எனக்கு அழைப்பு வரவில்லை.
முன்பு 50 கோடி ரூபாய் தருகிறோம் என்றனர். இப்போது 100 கோடி ரூபாய் என்கின்றனர். காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சி தினமும் நடக்கிறது.
மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, குமாரசாமி, ஷோபா, பா.ஜ., தேசிய பொது செயலர் சந்தோஷ் ஆகியோர், எங்கள் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.
அரசை கவிழ்ப்போம் என்று, பிரதமர் நரேந்திர மோடியிடம் வாக்கு கொடுத்து உள்ளனர். ஆனால், எங்கள் அரசை கவிழ்க்க முடியாது. எங்களிடம் 135 எம்.எல்.ஏ.,க்கள் இருக்கின்றனர். மக்கள் விரும்பும் சித்தராமையா முதல்வராக இருக்கிறார். அரசு பாறை போன்று உறுதியாக இருக்கிறது. அரசு ஐந்து ஆண்டுகள் இருக்கும்.
முதல்வர் மாற்றம் குறித்து, நான் ஒருபோதும் பேசியது இல்லை. சித்தராமையா வலுவாக உள்ளார். மூடா பிரச்னையில் முதல்வர் மீது வழக்கு தொடர, கவர்னர் அனுமதி அளித்தது சட்டவிரோதம். டில்லிக்கு சென்று அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்த பின், முதல்வர் மீது வழக்கு பதிய அனுமதி அளித்து உள்ளார்.
யாரோ தெருவில் செல்பவர் அளித்த புகாரில், வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுத்து உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மீது யாராவது புகார் அளித்தால், விசாரணைக்கு உத்தரவிடுவாரா. முதல்வர் மீது வழக்கு பதிய, விசாரணை அமைப்புகள் தான் அனுமதி கேட்க வேண்டும். கவர்னரை கண்டித்து 135 எம்.எல்.ஏ.,க்களும் போராட்டம் நடத்துவோம்.
கவர்னர் பா.ஜ.,வின் ஏஜென்டாக மாறி விட்டார். முதல்வர் நாற்காலியை பிடிக்க, காங்கிரசில், 'மியூசிக்கல் சேர்' விளையாட்டு நடப்பதாக, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகிறார். அவரது கட்சியில் என்ன நடக்கிறது என்று அவர் பார்க்கட்டும்.
பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில், கவர்னர்களை பயன்படுத்தி அரசுகளுக்கு நெருக்கடி தரப்படுகிறது. தமிழகம், கேரளா, மேற்கு வங்க அரசுகளுக்கு கவர்னர்கள் மூலம் தொல்லை கொடுத்தனர். இப்போது கர்நாடகாவிலும் ஆரம்பித்து உள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.