முதல்வர் மனைவி சார்பில் என்னிடம் பேரம்; சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா பகீர் தகவல்
முதல்வர் மனைவி சார்பில் என்னிடம் பேரம்; சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா பகீர் தகவல்
ADDED : டிச 18, 2024 10:37 PM

மைசூரு; ''முடா வழக்கில் சி.பி.ஐ., விசாரணை நடத்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறும்படி முதல்வர் சித்தராமையா மனைவி பார்வதி சார்பில், இரண்டு பேர் என்னிடம் டீல் பேசினர்,'' என, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புது குண்டு வீசியுள்ளார்.
'முடா'வில் இருந்து மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள், முதல்வர் சித்தராமையா சட்டவிரோதமாக வாங்கிக் கொடுத்த வழக்கை, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கக் கோரி, மைசூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வழக்கு பதிவு
இந்நிலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பக்தர்களுக்கு காணிக்கையாக வழங்கும் புடவைகள், கள்ளசந்தையில் விற்கப்படுவதாக, பெண் அதிகாரி ரூபா மீது சிநேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். இவர் மீது ரூபா அளித்த எதிர்புகாரில் வழக்குப்பதிவானது.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, மொபைல் போனை 'சுவிட்ச் ஆப்' செய்துவிட்டு, சிநேகமயி கிருஷ்ணா தலைமறைவானதாக கூறப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலையில் மைசூரு லோக் ஆயுக்தா அலுவலகத்திற்கு வந்த அவர், 'முடா' வழக்கு தொடர்பான சில ஆவணங்களை சமர்ப்பித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
நான் எங்கும் தலைமறைவு ஆகவில்லை. பொய் வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி நடந்தது. இதனால் மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து, பெங்களூரு சென்றேன். என் மீது பதிவான வழக்கின் விசாரணைக்கு, உயர்நீதிமன்றத்தில் இருந்து தடை வாங்கி வந்துள்ளேன். 'முடா' வழக்கில் நாளை (இன்று) விசாரணை நடக்கிறது.
மறுத்துவிட்டேன்
சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, நான் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெறக்கோரி, பா.ஜ., பிரமுகர் ஹர்ஷா, அவரது நண்பர் ஸ்ரீநிதி என்னிடம் டீல் பேசினர். முதல்வரின் மனைவி பார்வதியின் ஆதரவாளர்கள் என்று என்னிடம் கூறினர். மனுவை வாபஸ் பெற, நான் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் என் மகனிடம் டீல் பேசி உள்ளனர். இதுதொடர்பான புகைப்படங்களுடன், லோக் ஆயுக்தாவில் புகார் செய்துள்ளேன்.
லோக் ஆயுக்தா விசாரணை நடந்தால், இந்த வழக்கில் இருந்து சித்தராமையா தப்பித்து விடுவார். இதனால் சி.பி.ஐ., தான் விசாரிக்க வேண்டும். இதற்காக எவ்வளவு கஷ்டப்படவும் தயார். நான் செத்தால் கூட, இந்த வழக்கு நடக்கும். பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.
இவ்வாறு அவர்கூறினார்.
சிநேமயி கிருஷ்ணா கூறியதை முதல்வரின் மகனும், எம்.எல்.சி.யுமான யதீந்திரா மறுத்துள்ளார். “யாருடைய அழுத்தத்திற்கோ பயந்து, சிநேகமயி கிருஷ்ணா பொய் பேசுகிறார். என் அம்மா சார்பில் பா.ஜ., பிரமுகர் டீல் பேச வேண்டிய அவசியம் என்ன? எங்கேயோ சதி நடக்கிறது? நாங்கள் தவறு செய்யவில்லை. சட்டப்படி எதிர்கொள்வோம்,” என்றார்.

