''சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்'': ஆம்ஆத்மியினருக்கு கெஜ்ரிவால் 'அலர்ட்'
''சிறைக்கு செல்ல தயாராக இருங்கள்'': ஆம்ஆத்மியினருக்கு கெஜ்ரிவால் 'அலர்ட்'
ADDED : ஜன 01, 2024 12:16 PM

புதுடில்லி: ''குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்'' என ஆம்ஆத்மி கட்சியினர் மத்தியில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், நாளை மறுநாள் (ஜன.,3) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அனுப்பிய சம்மனை நிராகரித்த கெஜ்ரிவால் இந்த முறை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது: நாம் ஒரு போராட்டத்தை எதிர்கொள்கிறோம் என்று நினைக்கிறேன்; ஆனால் அதற்காக வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை. வழக்கறிஞர்களுடன் தொடர்ந்து தொடர்பில் தான் இருக்கிறேன். இன்று சிறையில் இருக்கும் நமது ஐந்து தலைவர்கள் எங்கள் ஹீரோக்கள். அவர்கள் அனைவரையும் நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.
வேறு எந்தக் கட்சிகளும் கவனம் செலுத்தாத விஷயங்களில் கவனம் செலுத்தியதால், சில ஆண்டுகளிலேயே அரசியலில் ஆம்ஆத்மி கட்சி உயர்ந்துள்ளது. கல்வி, சுகாதாரம், மின்சாரம், பணவீக்கம், வேலை வாய்ப்பு என்று எந்தக் கட்சியும் செய்யாததைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிப்பது, ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பது என்று நீங்கள் பேசினால், சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். எனவே, அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
நாட்டிலேயே முதன்முறையாக இந்தக் கட்சிகளுக்கு மாற்றாக மக்களுக்கு உண்மையான மாற்றம் கிடைத்துள்ளது. நாங்கள் வெற்றிபெறவில்லை அல்லது நல்லது செய்யவில்லை என்றால், எங்கள் கட்சித் தலைவர்கள் யாரும் சிறைக்குச் சென்றிருக்க மாட்டார்கள், இன்று அனைவரும் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.