பா.ஜ.,வின் பிரசாரத்தால் மஹா.,வில் தோல்வி: ஏக்நாத் ஷிண்டே
பா.ஜ.,வின் பிரசாரத்தால் மஹா.,வில் தோல்வி: ஏக்நாத் ஷிண்டே
ADDED : ஜூன் 12, 2024 01:47 PM

மும்பை: ''400க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம், அப்படி வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதுவோம் என பா.ஜ.,வினர் பிரசாரம் செய்ததால் மக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகின. இதுவே மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணியின் தோல்விக்கு காரணம்'' என அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பா.ஜ., - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - அஜித்பவாரின் தேசியவாத காங்., கூட்டணி (தேசிய ஜனநாயக கூட்டணி) 17 இடங்களிலேயே வென்றது. இண்டியா கூட்டணி 30 இடங்களிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வென்றன. அதிக தொகுதிகளில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட தே.ஜ., கூட்டணி குறைவான இடங்களிலேயே வென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தோல்வி குறித்து மஹாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் 400க்கும் அதிகமான இடங்களில் வெல்வோம் என பேசினர். அத்துடன் 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதுவோம் எனவும் பிரசாரம் செய்தனர். இந்த பிரசாரத்தால் பொதுமக்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகிவிட்டது.
அதாவது பா.ஜ., 400க்கும் அதிகமான தொகுதிகளில் வென்றால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுதிவிடுவர்; இதனால் இடஒதுக்கீடு பறிபோய்விடும் என எண்ணினர். இதனையே எதிர்க்கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்தன. இதுதான் பா.ஜ., கூட்டணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்துவிட்டது. இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவின் பேச்சை ஆமோதித்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி, “தே.ஜ., கூட்டணியின் '400 தொகுதிகள்' முழக்கத்தை, அரசியல் சாசனத்தை மாற்றிவிடுவோம் என்ற நோக்கில் எதிர்க்கட்சிகள் தவறாக மாற்றிவிட்டன'' எனக் கூறினார்.