'பெலகாவி பா.ஜ.,வினர் அடிமைகளா?' ஜெகதீஷ் ஷெட்டரை விளாசிய சவதி
'பெலகாவி பா.ஜ.,வினர் அடிமைகளா?' ஜெகதீஷ் ஷெட்டரை விளாசிய சவதி
ADDED : மார் 19, 2024 10:34 PM

பெலகாவி : “உங்களுக்கு தலைவணங்க, பெலகாவி பா.ஜ.,வினர் அடிமைகளா?” என, முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரை, காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி விளாசி உள்ளார்.
பெலகாவி அதானி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டு வரும், மாற்றுக் கட்சித் தலைவர்களை வரவேற்கிறோம். கட்சியில் இணைந்த பின்னர், அவர்களுக்கு உரிய பதவி வழங்கப்படும். கர்நாடகா பா.ஜ.,வில் எதுவுமே சரியில்லை.
கடந்த 40 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்தவர் ஈஸ்வரப்பா. அவரது மகனுக்கு சீட் மறுத்துள்ளனர். இதனால் ஷிவமொகாவில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களை, பா.ஜ., கைவிட்டு உள்ளது. பத்திரிகையாளராக இருந்து எம்.பி., ஆன பிரதாப் சிம்ஹா, மைசூரில் வளர்ச்சிப் பணிகள் செய்தார். ஆனால் அவருக்கு 'சீட்' மறுத்துள்ளனர். கொப்பால் எம்.பி., சங்கண்ணா கரடி, மக்கள் பணி ஆற்றக்கூடியவர். அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
பிரச்னை வெடிக்கும்
கொப்பால் பா.ஜ., வேட்பாளராக, டாக்டர் பசவராஜ் கியாடவர் அறிவிக்கப்பட்டு உள்ளார். 'கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கித் தருவதாக, எங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்தார்' என, பசவராஜ் கியாடவர் மீது, கொப்பால் மக்கள் குற்றச்சாட்டு கூறி உள்ளனர். அவருக்கு சீட் கொடுத்தது ஏன்?
எடியூரப்பா முதல்வராக இருந்தபோது, அவரது மகன் விஜயேந்திரா, 'அரசு விவகாரங்களில் தலையிடுகிறார்' என, பா.ஜ., மேலிட தலைவர்களுக்கு புகார் சென்றது. இதனால் எடியூரப்பாவை, முதல்வர் பதவியில் இருந்து இறக்கிவிட்டனர். ஆனால் இப்போது விஜயேந்திராவை பா.ஜ., மாநில தலைவராக நியமித்து உள்ளனர்.
லோக்சபா தேர்தல் முடிந்ததும், பா.ஜ.,வில் பிரச்னை வெடிக்கும். 'மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்பதற்காக, அமைதியாக இருக்கிறோம்' என, கர்நாடகா பா.ஜ., அதிருப்தி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
முடிவு எடுப்பது மக்கள்
நளின்குமார் கட்டீல் மாநிலத் தலைவராக இருந்தவர். அவருக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? தார்வாட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, பெலகாவி பா.ஜ., 'சீட்' கொடுக்க போவதாக பேச்சு அடிபடுகிறது.
அவருக்கு தலைவணங்க, பெலகாவி பா.ஜ.,வினர் அடிமைகளா? பெலகாவியில் போட்டியிட அங்கு உள்ள தலைவர்களுக்கு தகுதி இல்லையா?
சுரேஷ் அங்கடி எம்.பி.,யாக இருந்தபோது, பெலகாவியில் வளர்ச்சிப் பணிகள் செய்தார். அவர் மறைவுக்கு பின்னர், அவரது மனைவி மங்களா அங்கடி எம்.பி., ஆனார். அவருக்கே மீண்டும் சீட் கொடுத்திருக்க வேண்டும்.
ஜெகதீஷ் ஷெட்டர், பெலகாவியில் போட்டியிடுவதால், அவருக்கும், பெலகாவிக்கும் எந்த பயனும் இல்லை.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் முடிவு எடுப்பது மக்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

