ADDED : ஜன 22, 2025 11:28 PM

கர்நாடகாவிற்கு உள்ளே இருக்கும் பலரும் அறிந்திராத ஒரு சுற்றுலா தலம் தான் எல்லுார் கோட்டை. குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு ஒரு சிறந்த இடம்.
பெலகாவியில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ராஜஹன்ஸ்காட் எனும் எல்லுார் கோட்டை. இந்த கோட்டை கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோட்டைக்கு பெரும் வரலாறு உள்ளது. 12ம் நுாற்றாண்டில் ரட்டா வம்சத்தால் கட்டப்பட்டது.
பின்னர் விஜயபுராவின் பாரசீக பிரபு ஆசாத்கான் லாரி என்பவரால் புதுப்பிக்கப்பட்டது.
பெலகாவி நகரில் கோட்டை கட்டுமான பணிகள் நடைபெற்ற போது, எல்லுார் கோட்டை கண்காணிப்பு கோபுரமாக பயன்படுத்தப்பட்டது.
இந்த கோட்டை, சாமனுாரின் நவாப் மற்றும் பெஷ்வாஸ்; திப்பு சுல்தான் மற்றும் பெஷ்வாஸ்; பிம்காட் கோட்டை அதிகாரிகள் மற்றும் ராஜஹன்ஸ்காட் படைக்கும் இடையே என மூன்று போர்களை சந்தித்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், இந்த கோட்டையை பாதுகாக்க 100 வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் பயன்பாட்டுக்காக ஆயுதங்கள், உணவு தானியங்கள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
அத்துடன், பெலகாவி கோட்டையில் இருந்து இந்த கோட்டைக்கு ரகசிய சுரங்கப்பாதை இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோட்டையை சுற்றிலும் பலமான கருங்கற்களால் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படை வீரர்கள் இருக்கும் கண்காணிப்பு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை கோட்டைக்குள் எதிரிகள் நுழைந்து விட்டால், அவர்களுக்கு தெரியாமல், வெளியேற சிறிய அளவில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக வீரர்கள் தப்பி சென்றுவிடலாம்.
இப்படி பல வரலாறுகளை கொண்ட, இந்த கோட்டை இன்றும் அழகாகவும், கம்பீரமாகவும் காட்சி அளிக்கிறது. கோட்டையை காண்பதற்கு பல மாநிலங்களில் இருந்தும் நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணியர் வந்த வண்ணம் உள்ளனர்.
'கோட்டையை அடைவதற்கு படிக்கட்டுகள் வழியாக தான் செல்ல முடியும். சற்று சிரமமாக இருந்தாலும், கோட்டையை பார்க்கும் போது மகிழ்ச்சி பொங்கும்.
கோட்டையில் உள்ள பிரம்மாண்டமான நுழைவு வாயில்கள் பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கிறது.
மேலும் அக்காலத்தில் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த கோட்டைக்கு வந்தால் சுற்றுலாவுடன், வரலாற்றையும் தெரிந்து கொள்ளலாம்.
மொத்தத்தில் குடும்பத்துடன் சென்று குதுாகலமாக இருக்க எல்லுார் கோட்டை ஒரு சிறந்த இடமாகும்.
-- நமது நிருபர் --