ADDED : ஜன 22, 2024 06:18 AM
பெலகாவி: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு, முகூர்த்தம் குறித்து கொடுத்தவர், பெலகாவியை சேர்ந்த பண்டிதர் விஜயேந்திர ஷர்மா.
ராம ஜென்ம பூமி திருத்தல டிரஸ்ட் தலைவர் கோவிந்த கிரி மஹாராஜா, கடந்தாண்டு ஏப்ரல் 13ல், பெலகாவியின் பண்டிதர் விஜயேந்திர சர்மாவை தொடர்பு கொண்டார். அயோத்தி ராமர் கோவிலில் விக்ரகம் பிரதிஷ்டை செய்ய, முகூர்த்தம் குறித்து தரும்படி கோரினார். இதுபோன்று, நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பண்டிதர்களும், முகூர்த்தம் குறித்து கொடுத்தனர்.
இதில், பெலகாவி பண்டிதர் விஜயேந்திர சர்மா குறித்து கொடுத்த முகூர்த்தம் முடிவானது. கோவிந்தகிரி மஹாராஜ தலைமையில், அனைத்து பண்டிதர்களும் கலந்து ஆலோசித்து இந்த முகூர்த்தத்தை ஏற்றுக்கொண்டனர்.
பண்டிதர் விஜயேந்திர சர்மா கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, பூமி பூஜை நடத்தவும், நான் தான் முகூர்த்தம் குறித்து கொடுத்தேன். தற்போது கோவில் திறப்பு விழா, விக்ரகம் பிரதிஷ்டைக்கும் நானே முகூர்த்தம் நிர்ணயித்து கொடுத்தேன்.
ராமன் சூர்ய வம்சத்தில் பிறந்தவர். சூரியன் நெற்றிக்கு வரும் போது, முகூர்த்தம் கூடி வந்துள்ளது. அபிஜித் முகூர்த்தம், மேஷ லக்னம், அம்ருத சித்தி யோகம், மிருகசீரிஷ நட்சத்திரம், கூர்ம துவாதசி யோகத்தில், ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்வது மிகவும் நல்ல விஷயமாகும்.
அன்றைய தினம் மேஷ ராசியில் குரு உள்ளார். இந்த நாள் மிகவும் அபூர்வமானது. 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், அபூர்வமான முகூர்த்தம்.
கிட்டத்தட்ட 550 ஆண்டுகளுக்கு பின், அயோத்தியில் ராமன் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்காக ஏராளமானோர் உயிர் துறந்தனர். அவர்களின் ஆத்மாவுக்கு சாந்தி கிடைக்க வேண்டும். உலகம் முழுதும் அமைதி நிலவ வேண்டும் என்ற பிரார்த்தனையுடன், முகூர்த்தம் குறித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.