ADDED : அக் 16, 2024 10:21 PM
பெங்களூரு: பெமல் தொழிற்சாலைக்கு, 866.87 கோடி ரூபாயில், இரண்டு புல்லட் ரயில்கள் தயாரிக்கும் பணியை இந்திய ரயில்வே ஒப்படைத்துள்ளது.
பெங்களூரில் உள்ள பெமல் தொழிற்சாலை, இந்திய ரயில்வே துறைக்கு முக்கிய பங்காற்றுகிறது. வந்தே பாரத், வந்தே பாரத் துாங்கும் வசதி கொண்ட ரயில்களையும் தயாரித்து வருகிறது.
தற்போது ஒரு படி மேலே சென்று, புல்லட் ரயில்களையும் தயாரிக்க உள்ளது. இந்திய ரயில்வே துறை, இரண்டு புல்லட் ரயில்களை தயாரிக்கும்படி, பெமல் தொழிற்சாலைக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
இதற்காக, 866.87 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 2026 இறுதிக்குள் புல்லட் ரயில்களை தயாரித்து, ரயில்வே துறையிடம் ஒப்படைக்க வேண்டும். 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே புல்லட் ரயில்கள் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தம் குறித்த முழு விபரம் விரைவில் பெமல் சார்பில் வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் புல்லட் ரயில் சேவை, ஆமதாபாத் - மும்பை இடையே இயக்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக, பெங்களூரு - சென்னை இடையேயும் புல்லட் ரயில் இயக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

