'கிரஹ லட்சுமி' திட்டத்தின் பயனாளிகள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் திடீர் கேள்வி
'கிரஹ லட்சுமி' திட்டத்தின் பயனாளிகள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் திடீர் கேள்வி
ADDED : பிப் 20, 2025 06:38 AM

விஜயபுரா: ''பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும், கிரஹ லட்சுமி திட்டத்தில் இருந்து, பணக்கார பெண்கள் பெயர்களை நீக்க வேண்டும்,'' என, மாநில தொழில் அமைச்சர் எம்.பி.பாட்டீல் வலியுறுத்தியுள்ளார்.
விஜயபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ., தலைவர் விமர்சித்தனர். ஆனால் தற்போது டில்லியில் வாக்குறுதித் திட்டங்களை அறிவித்து தான் வெற்றி பெற்றுள்ளனர்.
எங்களது திட்டங்களை காப்பி அடிக்கின்றனர். ஏழைகள், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவே ஐந்து வாக்குறுதித் திட்டங்களை கொண்டு வந்தோம். வெற்றிகரமாக செயல்படுத்துகிறோம்.
'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணத்தை பணக்கார பெண்களுக்கு வழங்க வேண்டாம். அவர்கள் தாங்களாக முன்வந்து எங்களுக்கு பணம் வேண்டாம் என்று கூற வேண்டும்.
இல்லாவிட்டால் பணக்கார பெண்களின் பெயர்களை திட்டத்தில் இருந்து அரசு நீக்க வேண்டும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை நாங்கள் யாரும் எதிர்க்கவில்லை. அந்த அறிக்கையின் மூலம் எந்த ஜாதியினருக்கும் அநீதி ஏற்பட்டு விட கூடாது.
அந்த அறிக்கையில் எங்களுக்கு சில குழப்பம் உள்ளது. அறிக்கையை முழுமையாக பார்த்த பின் பேசுகிறேன்.
முந்தைய பா.ஜ., ஆட்சியில் அரசு பணிகளுக்கான டெண்டர் சட்டவிரோதமாக கொடுக்கப்பட்டுள்ளது. டெண்டர் விட்டு கமிஷன் பெற்றனர். அவர்கள் செய்த பாவத்தை நாங்கள் சுமக்கிறோம்.
பா.ஜ., ஆட்சியில் மருத்துவ கல்வித் துறையில் பெரிய ஊழல் நடந்துள்ளது. எங்கள் ஆட்சியில் அனைத்தையும் விசாரிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த 2023 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின்போது, 'அனைத்து பெண்களுக்கும் மாதம் 2,000 ரூபாய் வழங்கப்படும். என் மனைவி பார்வதிக்கு கூட 2,000 ரூபாய் கிடைக்கும்' என, முதல்வர் சித்தராமையா கூறி இருந்தார்.
ஆனால் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர் தற்போது, பணக்கார பெண்களுக்கு வழங்கப்படும் 2,000 ரூபாய் கொடுக்கக் கூடாது என்று கூறி இருப்பது, புது சர்ச்சையை கிளப்பி உள்ளது.