பெங்., மாநகராட்சி முறைகேட்டில் சிக்குகின்றனர் 9 அதிகாரிகள்!: 'டுபாக்கூர்' சொசைட்டிகளுக்கு பணம் பரிமாற்றம்
பெங்., மாநகராட்சி முறைகேட்டில் சிக்குகின்றனர் 9 அதிகாரிகள்!: 'டுபாக்கூர்' சொசைட்டிகளுக்கு பணம் பரிமாற்றம்
ADDED : ஜூன் 29, 2024 11:25 PM
பெங்களூரு: வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில், 187 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததைப் போன்று, பெங்களூரு மாநகராட்சியிலும் முறைகேடு நடந்திருப்பதை, கணக்கு தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சியின் ஒன்பது அதிகாரிகள் மீது லோக் ஆயுக்தாவில் புகார் பதிவாகியுள்ளது.
கர்நாடக வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர், 48, சமீபத்தில் ஷிவமொகாவின், வினோபாநகரில் உள்ள தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் இவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை விவரித்திருந்தார்.
பிற்படுத்தப்பட்டோர் பிரிவுகள் நலத்துறை அமைச்சராக இருந்த நாகேந்திரா ராஜினாமா செய்துள்ளார். ஆணையத்தில் நடந்த முறைகேடு, மாநிலத்தில் புகைந்து கொண்டிருக்கிறது. முறைகேட்டுக்கு பொறுப்பேற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படி, சித்தராமையாவை எதிர்க்கட்சியான பா.ஜ., நச்சரிக்கிறது; போராட்டமும் நடத்துகிறது.
இந்நிலையில் இதே போன்ற முறைகேடு, பெங்களூரு மாநகராட்சியில் நடந்திருப்பதை, கணக்கு தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மாநகராட்சியின் கோடிக்கணக்கான பணத்தை செயல்பாட்டிலேயே இல்லாத கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட சில அமைப்புகளின் வங்கிக்கணக்குகளுக்கு, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த 2019 - 20 மற்றும் 2020 - 21ல் கர்நாடகாவில், கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. இந்த காலகட்டத்தில் சுய தொழில் தொடர்பான, வெவ்வேறு திட்டங்களுக்காக பயனாளிகளின் ஆவணங்களை மாநகராட்சி பெற்றிருந்தது.
இதை வைத்து மாநகராட்சியின் சமூக நலப்பிரிவு அதிகாரிகள், போலியான பயனாளிகள் பட்டியல் தயாரித்துள்ளனர். இவர்களின் பெயரில், கோடிக்கணக்கான ரூபாயை செயல்பாட்டிலேயே இல்லாத கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி, அதில் பணத்தை பரிமாற்றம் செய்துள்ளனர்.
இதில், 1-02 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தை சுருட்டும் நோக்கில், தலித்துகள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், கணவனை இழந்த பெண்கள், வேலை தேடுவோர் என, பலரின் பெயரை தவறாக பயன்படுத்தியுள்ளனர். பொய்யான ஆவணங்கள் உருவாக்கி, மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
பெங்களூரு மாநகராட்சியின், மேற்கு மண்டலத்தில் இத்தகைய சொசைட்டிகள், கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு, பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. மோசடி வெளிச்சத்துக்கு வந்தவுடன், மாநகராட்சி நிர்வாக அதிகாரிகள் லோக் ஆயுக்தாவில் புகார் அளித்துள்ளனர்.
புகாரை ஏற்று விசாரணையை துவங்கிய லோக் ஆயுக்தா டி.ஜி.பி., அரசு நிதித்துறை தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார். மாநகராட்சி மேற்கு மண்டலத்தின் ஒன்பது அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதி கேட்டுள்ளார்.
சுபேஷ், தேவகி, காயத்ரி, சுப்ப ராமையா, கிரியப்பா, கீதா, குமாரி குசுமா, லிங்கண்ணா குன்டல்லி, சத்தியமூர்த்தி ஆகியோர், 2019 - 20, 2020 - 21ல், மேற்கு மண்டலத்தில் நிதிப்பிரிவில் பணியாற்றினர். அரசின் அனுமதி கிடைத்தவுடன், இவர்களிடம் லோக் ஆயுக்தா விசாரணை நடத்தும்.
சட்டவிரோத பண பரிமாற்றம் குறித்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி மேற்கு மண்டல இணை கமிஷனருக்கு, நிர்வாக பிரிவு துணை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.
சொசைட்டிகளுக்கு சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்தது குறித்து, அரசுக்கு அறிக்கை அளிக்கும்படி, மேற்கு மண்டல இணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது. அவர் அறிக்கை அளித்த பின்னரே, எந்தெந்த சொசைட்டிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு, எவ்வளவு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டது என, தெரியும்.
- மஞ்சுநாத்,
துணை கமிஷனர், மாநகராட்சி நிர்வாக பிரிவு