10 ஆண்டு அபார வளர்ச்சியால் பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு பெங்., சென்ட்ரல் தலைவர் சப்தகிரிகவுடா நம்பிக்கை
10 ஆண்டு அபார வளர்ச்சியால் பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு பெங்., சென்ட்ரல் தலைவர் சப்தகிரிகவுடா நம்பிக்கை
ADDED : மார் 19, 2024 06:30 AM
பெங்களூரு: ''இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடி. நாடு கடந்த 10 ஆண்டுகளில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சிப் பணிகளை பார்த்து மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுவர். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்,'' என, பெங்களூரு சென்டிரல் பா.ஜ., தலைவர் சப்தகிரிகவுடா நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூரு காந்திநகர் சட்டசபை தொகுதில், இரண்டு முறை போட்டியிட்டவர் பா.ஜ.,வின் சப்தகிரிகவுடா. இவர், கர்நாடகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராமசந்திரகவுடாவின் மகன். கடந்த முறை சட்டசபை தேர்தலில், வெறும் 105 ஓட்டுகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தமிழர்கள் அதிகம்
தமிழர்கள் அதிகம் மிகுந்த தொகுதிக்கு உட்பட்ட அவரது பணியை பாராட்டி சமீபத்தில், பெங்களூரு சென்ட்ரல் பா.ஜ., தலைவராக நியமிக்கப்பட்டார்.
நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
கே: சட்டசபை தேர்தலில் தோல்விக்கு காரணம் என்ன?
ப: சுயேச்சையாக போட்டியிட்ட பா.ஜ.,வின் கிருஷ்ணய்யா ஷெட்டி, ம.ஜ.த., வேட்பாளர் ஓட்டுகளை பறித்துவிட்டனர். காங்கிரஸ் அரசின் தோல்விகளை வீடு, வீடாக சென்று விளக்கி, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இப்போதே விதைக்கப்படும். வாக்குறுதித் திட்டங்களை கூறி, மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றனர்.
வாக்குறுதி திட்டங்கள்
கே: நீங்கள் தலைவராக பதவியேற்ற பின், லோக்சபா தேர்தல் வந்துள்ளது. எப்படி எதிர்கொள்வீர்?
ப: லோக்சபா தேர்தல் சவால் மிகுந்ததாக இருக்கிறது. பா.ஜ., வேட்பாளர்கள், முந்தைய தேர்தலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு, ஓட்டுச்சாவடி மட்ட அளவில் தொண்டர்களை தயார்ப்படுத்தி உள்ளோம். மத்திய பா.ஜ., அரசின் திட்டங்களையும்; காங்கிரஸ் அரசின் தோல்விகளை ஒவ்வொருவரிடமும் சொல்லி ஓட்டுக் கேட்போம். எந்த ஆட்சி வந்தால், நாட்டுக்கு நல்லது என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
கே: காங்கிரசின் ஐந்து வாக்குறுதித் திட்டங்களால், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறதே?
ப: காங்கிரஸ் திட்டங்களால் மக்கள் நிம்மதியாக இல்லை. ஒரு குடும்பத்துக்கு திட்டம் கிடைத்தால், இன்னொரு வீட்டுக்கு கிடைக்கவில்லை. ஒருவரிடம் பறித்து, மற்றொருவரிடம் வழங்குகின்றனர். மக்கள் எந்த பயனும் அடையவில்லை.
கே: 'ஜி.எஸ்.டி.,யில் மாநில பங்கு, வறட்சி நிவாரணம், மானியம் ஆகியவற்றை மத்திய அரசு வழங்கவில்லை' என, மாநில அரசு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறதே?
ப: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வழங்கிய நிதியை விட, தற்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 200 சதவீதம் அதிக நிதியை கர்நாடகாவுக்கு வழங்கியுள்ளது. இதை அவர்களால் மறுக்க முடியுமா? ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும் என்பதை, நிதி கமிஷன் தான் அரசுக்கு சிபாரிசு செய்யும். அதன்படி, மத்திய அரசு நிதி வழங்கும்.
கே: கர்நாடக அரசு நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், பா.ஜ.,வுக்கு 15 - 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறதே?
ப: அது காங்கிரஸ் கருத்துக் கணிப்பு. கடந்த முறை 25 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற்றது. இம்முறை ம.ஜ.த.,வும், எங்களுடன் இணைந்துள்ளதால், 28க்கு, 28 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி.
தண்ணீர் பிரச்னை
கே: பெங்களூரு தண்ணீர் பிரச்னையை அரசு எப்படி சமாளித்திருக்க வேண்டும்?
ப: தண்ணீர் பிரச்னை இப்போது ஏற்படவில்லை. வறட்சி ஏற்பட்டபோதே, பிரச்னையைத் தீர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டிருக்க வேண்டும். மக்கள் என்ன பிரச்னையை சந்திப்பர் என்று இந்த அரசுக்கு தெரியவே தெரியாது.
கே: லோக்சபா தேர்தல் சீட் கிடைக்காததால், ஈஸ்வரப்பா, மாதுசாமி, கரடி சங்கண்ணா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படுமா?
ப: அவர்கள், எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள். அந்த விஷயம் குறித்து நான் பேசுவதற்கு விரும்பவில்லை. கட்சி மேலிட தலைவர்கள் பார்த்துக் கொள்வர்.
கே: லோக்சபா தேர்தல் முடிந்து, ஆறு மாதங்களில், காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, சட்டசபை தேர்தல் நடக்கும் என்று பா.ஜ.,வின் நளின்குமார் கட்டீல் சொல்லியிருப்பது குறித்து, உங்கள் கருத்து என்ன?
ப: அது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், முதல்வர் பதவிக்காக, சித்தராமையா, சிவகுமார் இடையே மோதல் நடந்து வருகிறது. அதை பார்க்கும்போது, லோக்சபா தேர்தலுக்கு பின், சட்டசபை தேர்தல் நடக்கும் சூழல் உருவாகலாம்.
கே: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் நடத்தாமல் தாமதப்படுத்துவதால், பா.ஜ.,வின் வெற்றி கேள்விக்குறியாகுமா?
ப: எங்கள் ஆட்சி காலத்தில் செய்த வார்டு மறுவரையறையை மாற்றி, காங்கிரஸ் அரசு மீண்டும் வரையறை செய்துள்ளது. நாளையே மாநகராட்சி தேர்தல் நடந்தாலும், பெரும்பான்மை வார்டுகளில் வெற்றி பெற்று, மாநகராட்சியை கைப்பற்றுவோம். லோக்சபா தேர்தலுக்கு பின், கவனம் செலுத்துவோம்.
கே: மக்கள் எதற்காக, பா.ஜ.,வுக்கு ஆதரவளிப்பர்?
ப: இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தியவர் பிரதமர் மோடி. நாடு கடந்த 10 ஆண்டுகளில் அபரீத வளர்ச்சி அடைந்துள்ளது. வளர்ச்சிப் பணிகளை பார்த்து மக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டுப் போடுவர்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

