ADDED : பிப் 27, 2024 06:13 AM
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி பட்ஜெட் நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படுகிறது. இம்முறை 13,000 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூரு மாநகராட்சியின் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட், நாளை மறுதினம் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் தயாராகின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகள் தாக்கல் செய்யும் நான்காவது பட்ஜெட்.
பெங்களூரு மாநகராட்சியில், 2020ம் ஆண்டு செப்டம்பர் 10ல், மக்கள் பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவடைந்தது. இதுவரை தேர்தல் நடக்கவில்லை. அன்றைய பா.ஜ., அரசு, கொரோனாவை காரணம் காண்பித்து தேர்தலைத் தள்ளிவைத்தது. பெங்களூரு மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தது.
அதன்பின் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, 2023ன் டிசம்பர் இறுதிக்குள் தேர்தல் நடத்துவதாக கூறியது. ஆனால் தேர்தல் நடத்தவில்லை. லோக்சபா தேர்தலுக்கு முழு மூச்சாக தயாராகிறது.
ஆண்டுதோறும் அதிகாரிகளே, பட்ஜெட் தாக்கல் செய்கின்றனர். மார்ச் முதல் வாரம் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே நாளை மறுதினம் 2024 - 25ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சில மாதங்களாகவே, அதிகாரிகள் பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகி வந்தனர். பொதுமக்கள், பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் உட்பட, பலரிடம் 70,000க்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வந்துள்ளன. இம்முறை 13,000 கோடி ரூபாய்க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வாய்ப்புள்ளது.
