பெங்., மாநகராட்சிக்கு இடைக்கால மேயர்; தன்னை நியமிக்குமாறு ஐகோர்ட்டில் முதியவர் மனு
பெங்., மாநகராட்சிக்கு இடைக்கால மேயர்; தன்னை நியமிக்குமாறு ஐகோர்ட்டில் முதியவர் மனு
ADDED : அக் 23, 2024 08:57 PM
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த வேண்டாம். தன்னை இடைக்கால மேயராக அறிவிக்க, அரசுக்கு உத்தரவிடக் கோரி ஒரு முதியவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அவர் குறிப்பிட்டுஉள்ளதாவது:
பெங்களூரு மாநகராட்சியில், மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சிக் காலம், 2020 செப்டம்பர் 10ல் முடிவடைந்தது. அன்றைய பா.ஜ., அரசு, கொரோனாவை காரணம் காண்பித்து, தேர்தலை தள்ளிவைத்தது. மாநகராட்சிக்கு நிர்வாக அதிகாரியை நியமித்தது.
அதன்பின் அமைந்த காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு, பா.ஜ., அரசுகளும், மாநகராட்சிக்குத் தேர்தல் நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. தற்போதைய காங்கிரஸ் அரசிலும் இதே சூழ்நிலை நிலவுகிறது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பி, உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் கவுன்சிலர்கள் மனுத் தாக்கல் செய்தும் பயன் இல்லை.
இதற்கிடையே பெங்களூரின் லேவல்லி சாலையில் வசிக்கும் முரளி கிருஷ்ணா பிரம்மானந்தம், 66, கடந்த 2022ல் உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாநகராட்சிக்கு தேர்தல் நடப்பது தாமதமாகிறது. வார்டு மறு சீராய்வு, மாநகராட்சி சட்டம் - 2020 விவேகமற்றது. மாநகராட்சிக்கு மக்கள் மூலம் நேரடியாக, மேயரை தேர்வு செய்ய வேண்டும் என, 2018லேயே கோரிக்கை வந்திருந்தது.
பெங்களூரு நகர மேம்பாட்டுத் துறை அமைச்சர் என்பது தேவையற்றது. அது ஒரு வகையில், மத்திய அமைச்சரவையில், கர்நாடக அமைச்சர் என்பதை போன்றுள்ளது.
மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த கூடாது என, மாநில அரசு, தேர்தல் ஆணையம் மற்றும் பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் சேர்ந்து, என்னை இடைக்கால மேயராக தேர்வு செய்யும்படி உத்தரவிட வேண்டும். என் வேண்டுகோள் விவேகமற்றதும் அல்ல, சட்ட விரோதமானதும் அல்ல. தவறான நோக்கம் கொண்டதும் அல்ல.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நேற்று முன் தினம், தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் முரளி கிருஷ்ணா பிரம்மானந்தம், ஆஜராகவில்லை. இதற்கு முன்பு நடந்த விசாரணையிலும், அவர் ஆஜராகவில்லை.
இதை நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டு சென்ற அரசு தரப்பு வக்கீல், 'மனுவில் உள்ள அம்சங்கள், வேண்டுகோள் தேவையற்றது. எனவே மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்காத உயர் நீதிமன்ற அமர்வு, 'நாங்கள் மனுவை தள்ளுபடி செய்ய முடியாது. மனுத் தாக்கல் செய்த மஹானுபாவர் யார் என்பதை, பார்க்க வேண்டும்' என கூறி விசாரணையை தள்ளிவைத்தது.