மழைநீர் சேகரிப்பில் பெங்., மக்கள் அலட்சியம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் மெத்தனம்
மழைநீர் சேகரிப்பில் பெங்., மக்கள் அலட்சியம் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல் அதிகாரிகள் மெத்தனம்
ADDED : மார் 04, 2024 07:07 AM
பெங்களூரு: மழைநீர் சேகரிப்பு வசதியை செய்து கொள்வதில், பெங்களூரு மக்கள் அலட்சியம் காண்பிப்பதால், குடிநீர் பிரச்னை அதிகரிக்கிறது. இவ்விஷயத்தில் மக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிகாரிகளும் அக்கறை காண்பிக்கவில்லை.
பெங்களூரில் ஆண்டு தோறும் 970 மி.மீ., மழை பெய்கிறது. இந்த தண்ணீர் சாக்கடைகள், மழைநீர் கால்வாய்கள் வழியாக பாய்ந்து வீணாகிறது.
நுாற்றுக்கணக்கான கி.மீ., தொலைவில் இருந்து, பெங்களூருக்கு காவிரி நீரை கொண்டு வர கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால், பெங்களூரில் பெய்யும் மழை நீரை சேகரித்து, பயன்படுத்துவதில் குடிநீர் ஆணைய அதிகாரிகள் ஆர்வம் காண்பிக்கவில்லை.
இதன் விளைவாக, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது; போர்வெல்கள் வற்றுகின்றன. சொட்டு நீருக்கும் பரிதவிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கோடைக்கால துவக்கத்திலேயே, பெங்களூரின் பல்வேறு இடங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மக்கள், டேங்கர் நீரை நம்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. குடிநீர் வாரிய அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், 200 தனியார் டேங்கர்களை வாடகைக்கு எடுத்து, குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வினியோகிக்கின்றனர்.
திட்டம்
கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, போர்வெல் தோண்ட தயாராகின்றனர். கோடைக்காலத்தை சமாளிக்க, இவ்வளவு கஷ்டப்படும் அதிகாரிகள், மழை நீரை சேமிக்க சரியான திட்டம் வகுத்திருந்தால், பிரச்னையே ஏற்படாது.
பல ஆண்டுகளுக்கு முன்பே 2009 ல் வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்வதை, குடிநீர் வாரியம் கட்டாயமாக்கியது.
இதற்காக அதிகபட்ச கால அவகாசமும் கொடுத்தது. ஆனால் லட்சக்கணக்கான வீடுகள், கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்படவில்லை.
கழிவு நீர் பயன்பாடு
அபராதம் விதிப்பதாக எச்சரித்தும், மக்கள் பொருட்படுத்தவில்லை. அதன்பின் அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. மழைநீரை சேமிப்பதன் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தவில்லை. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை பயன்படுத்துவது குறித்தும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
இது தொடர்பாக, நீர்ப்பாசன வல்லுனர்கள் கூறியதாவது:
குடிநீர் வாரிய அதிகாரிகள், இனியாவது விழித்துக்கொண்டு, அனைத்து வீடுகள், அரசு கட்டடங்கள், வர்த்தக கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில், மழைநீர் சேகரிப்பை கட்டாயமாக்க வேண்டும்.
அப்படி செய்தால் மட்டுமே, காவிரி நீர் மீதான அழுத்தம் குறையும். இல்லையென்றால் வரும் நாட்களில், பெங்களூரில் குடிநீர் பிரச்னை தீவிரமடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
பெங்களூரில், 20 லட்சம் வீடுகளில், 10.84 லட்சம் வீடுகள் காவிரி குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. இவற்றில் 1,95,771 வீடுகளில் மட்டும், மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளன.
அபராத வருமானம்
மழைநீர் சேகரிப்பு செய்யாதோரிடம், குடிநீர் வாரியம் அபராதம் விதிக்கிறது.
இதன் மூலமாகவே, குடிநீர் வாரியத்துக்கு ஆண்டு தோறும் இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
அதிகாரிகள், அபராதம் வசூலிப்பதில் காண்பிக்கும் ஆர்வத்தை, மழைநீர் சேகரிப்பு குறித்து மக்களுக்கு உணர்த்த முயற்சிக்கவில்லை.
பெங்களூரின் பரப்பளவு, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது; மக்கள் தொகையும் ஏறுமுகமாகிறது. தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்க வேண்டும்.
வீணாகும் மழைநீரை சேகரிக்க சரியான திட்டம் வகுப்பது நல்லது. இல்லையென்றால் வரும் காலங்களில், மக்களுக்கு குடிநீர் வினியோகிப்பது கஷ்டமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

