ADDED : மார் 07, 2024 04:09 AM
பெங்களூரு : கேரளாவில் சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறி, புதுச்சேரி சென்ற மென்பொறியாளர் மர்மமான முறையில் மாயமாகி உள்ளார்.
பெங்களூரு ஒயிட்பீல்டின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ரஞ்சித், 42. இவரது மனைவி ஹிதா, 39. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். ஒயிட்பீல்டில் உள்ள, 'எனர்ஜி டெக்னாலஜி' நிறுவனத்தில், டீம் லீடராக ரஞ்சித்தும், மென் பொறியாளராக மனைவியும் பணியாற்றி வந்தனர்.
சமீப நாட்களாக ரஞ்சித், மன அழுத்தத்தால் அவதிப்பட்டார்; சிகிச்சையில் இருந்தார். மன ஆறுதலுக்காக, தன் சொந்த ஊரான கேரளாவின் திருச்சூருக்குச் செல்ல விரும்பினார். பிப்ரவரி 22ல் மெட்ரோ ரயிலில் மெஜஸ்டிக் வந்தார். மனைவிக்கு போன் செய்து, திருச்சூர் செல்ல ரயிலில் ஏறியதாக கூறினார். அதன்பின் அவரது போன் 'சுவிட்ச் ஆப்' ஆனது. திருச்சூருக்கும் செல்லவில்லை.
பீதியடைந்த மனைவி, ஒயிட்பீல்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மொபைல் எண்களை வைத்து, ரஞ்சித்தை தேடினர். மெஜஸ்டிக்கின் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் ஏஜன்சியில், வாடகை காரை எடுத்துக் கொண்டு புதுச்சேரிக்கு சென்றது தெரிந்தது.
இதற்கிடையில், இ - மெயில் மூலம், மனைவிக்கு தகவல் அனுப்பிய ரஞ்சித், தனக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால், பிரச்னைகளை உருவாக்கியதற்காக மன்னிப்பு கேட்டிருந்தார். ஆனால், தான் இருக்கும் இடத்தை கூறவில்லை.
டிராவல் ஏஜன்சி கார் ஓட்டுனரை விசாரித்தபோது, புதுச்சேரியின், 'ஐஜி ஸ்கொயரில் ரஞ்சித்தை 'டிராப்' செய்ததாக கூறினார். எனவே புதுச்சேரிக்கு சென்ற ஹிதா, நான்கு நாட்கள் தங்கி தேடியும், கணவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை.
கடற்கரை சாலையில் அவர் சென்றது தெரிந்தது. அங்கிருந்து எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. ரஞ்சித் தன் வங்கி கணக்கில் இருந்து, பணம் எதுவும் எடுக்கவில்லை.
ஒயிட்பீல்டு போலீசார், அவரை கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.

