வீட்டை இடித்த பெங்., மாநகராட்சி: ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
வீட்டை இடித்த பெங்., மாநகராட்சி: ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு
ADDED : பிப் 19, 2024 07:08 AM
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சிக்கு எதிரான, எட்டு ஆண்டுகள் போராட்டத்தில் பெண்ணுக்கு வெற்றி கிடைத்தது.
பெங்களூரு கே.ஆர்.புரம், தொட்டனஹுந்தியின், நாராயணா ரெட்டி லே - அவுட்டில் சொந்த வீடு கட்டி வசிப்பவர் கவிதா பொட்வால். இவர் சட்டவிரோதமாக வீடு கட்டியதாக, பெங்களூரு மாநகராட்சிக்கு புகார் வந்தது. பொதுவாக இதுபோன்ற புகார்கள் வந்தால், விதிமுறைப்படி நோட்டீஸ் அளித்து, அவரிடம் விளக்கம் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனால் மாநராட்சி அதிகாரிகள், 2016 ஏப்ரல் 25ல், நோட்டீஸ் கொடுக்காமல் திடீரென வந்து இடித்து தள்ளினர். இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கவிதா வழக்கு தொடர்ந்தார்.
மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்தது. நேற்று முன்தினம் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இத்தகைய வழக்குகளில், அதிகாரிகள் விதிமுறையை பின்பற்ற வேண்டும். புகார் வந்ததும் நோட்டீஸ் அளிக்க கூடாது. சம்பந்தப்பட்ட கட்டடத்துக்கு நேரில் சென்று, ஆய்வு செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட வரைபடத்துக்கு தக்கபடி, கட்டடம் கட்டப்பட்டுள்ளதா, விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கட்டடத்தின் அக்கம், பக்கத்தில் இடம் விடப்பட்டுள்ளதா, கட்டடத்தின் உயரம், தரம் என, அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
என்னென்ன விதிமுறைகளை மீறப்பட்டன என்பதை பட்டியலிட வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் மட்டுமே, நோட்டீஸ் அளித்து, சட்டரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே விதிமுறையை அனைத்து கட்டடங்களுக்கும், பின்பற்ற வேண்டும்.
மனுதாரரின் வீட்டை இடித்ததில், பொருட்களும் சேதமடைந்துள்ளன. அவருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். தவறு செய்த அதிகாரிகளிடமே, இந்த தொகையை வசூலிக்க வேண்டும்.
அவர் முன்பிருந்த இடத்தில், மீண்டும் வீடு கட்டி வசிக்க துவங்கும் வரை, 2016 ஏப்ரல் 25லிருந்து கணக்கிட்டு, மாதந்தோறும் 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

