பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
பயணிகள் வருகை, சரக்கு போக்குவரத்து; பெங்களூரு விமான நிலையம் சாதனை!
UPDATED : ஏப் 05, 2025 10:19 AM
ADDED : ஏப் 05, 2025 09:33 AM

பெங்களூரு: 2025ம் ஆண்டு நிதியாண்டில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 4.1 கோடிக்கு அதிகமான பயணிகளையும், 5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
மக்கள் அனைவரும் விமானத்தில் விரும்பி பயணம் செய்து வருகின்றனர். கோவிட் தொற்றுக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. டிக்கெட் விலை எப்படி இருந்தாலும் வாழ்வில் ஒருமுறையேனும் வானில் விமானத்தில் பறப்பது அனைவரும் விரும்புவது தான்.
இந்நிலையில், 2025ம் ஆண்டு நிதியாண்டில் பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் 4.1 கோடிக்கு அதிகமான பயணிகளையும், 5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
2024ம் ஆண்டு நிதியாண்டுடன் ஒப்பிடும்போது, இந்தாண்டு அதிகம் பேர் பயணம் செய்துள்ளனர். கடந்தாண்டில் 3.5 கோடி பேர் பயணம் செய்து இருந்தனர். சர்வதேச பயணிகள் வருகையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக, இண்டிகோ நிறுவனம் தனது விமான சேவைகளை அதிகரித்துள்ளது.
கடந்த நான்கு மாதங்களாக, சர்வதேச போக்குவரத்தில் இந்தியாவின் பரபரப்பான விமான நிலையமான பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.