ADDED : ஜன 17, 2025 07:29 AM

பெங்களூரு: நடப்பு நிதியாண்டு முடிவடைய, இன்னும் இரண்டரை மாதம் பாக்கியுள்ள நிலையில், சொத்து வரி வசூலில் பெங்களூரு மாநகராட்சி 83 சதவீதம் வரி வசூலித்து சாதனை செய்துள்ளது.
இது தொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில், 5,210 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 4,370 கோடி ரூபாய் வரி வசூலாகியுள்ளது. நிதியாண்டு முடிவடைய இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், 83 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக சொத்து வரி பாக்கி வைத்துள்ளோரிடம், வரியை வசூலிக்க 'ஒன் டைம் செட்டில்மென்ட்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் சலுகை கடந்தாண்டு நவம்பர் இறுதியில் முடிந்தது.
தற்போது ஒவ்வொரு வாரமும் 10 முதல் 13 கோடி ரூபாய் வரி வசூலாகிறது. மார்ச் இறுதிக்குள் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க திட்டமிட்டுள்ளோம்.
சொத்து வரி வசூலிக்க, வருவாய் பிரிவு அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிக வரி பாக்கி வைத்துள்ள சொத்து உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. வர்த்தக கட்டடங்கள் ஜப்தி செய்யப்படுகின்றன. கடந்தாண்டு இதே கால கட்டத்தில், பெங்களூரு மாநகராட்சியில் 3,480 கோடி ரூபாய் சொத்து வரி வசூலானது. நடப்பாண்டு 4,370 கோடி ரூபாய்க்கும் அதிகமான வரி வசூலாகியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.