ADDED : மார் 05, 2024 01:08 AM
பெங்களூரு நீதிமன்றம் 'சம்மன்'
சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் பேச்சை கண்டித்து, கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பரமேஸ் என்பவர், அங்குள்ள 42வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு, பிப்., 2ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 4ம் தேதியான நேற்று, நீதிமன்றத்தில் ஆஜராகும்படி, உதயநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி ஜெ.ப்ரீத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் உதயநிதி ஆஜராகவில்லை. ஆனால், அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் பெற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அது அவருடைய கையொப்பமாக தெரியவில்லை என்பதால், ஏப்ரல் 26ம் தேதி நேரில் ஆஜராகும்படி இரண்டாவது சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இம்முறை, சென்னையில் உள்ள எஸ்.பி., அந்தஸ்திலான அதிகாரி வாயிலாக உதயநிதியிடம் நேரில் சம்மன் வழங்க உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 26ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

