ADDED : பிப் 29, 2024 05:38 AM
பெங்களூரு, : போக்குவரத்து நெருக்கடியால், பெங்களூரு தத்தளிக்கிறது. குறிப்பாக 12 முக்கியமான காரிடார் சாலைகள், 47 ஜங்ஷன்கள், 63 சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.
பெங்களூரு என்றால், 'டிராபிக் ஜாம் சிட்டி' என்றே பிரசித்தி பெற்றது. பெங்களூரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து வசதி இருந்தும், போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவில்லை. பல சாலைகள், ஜங்ஷன்களில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது.
போக்குவரத்து போலீசார், 12 முக்கியமான காரிடார் சாலைகள், 47 ஜங்ஷன்கள், 63 சாலைகளில் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளனர்.
பல்லாரி சாலை, வின்ட்சர் மேனர் ஜங்ஷன், ரமண மகரிஷி சாலை, மேக்ரி சதுக்கம், பழைய மைசூரு சாலை, டிரினிட்டி சதுக்கம், கே.ஆர்.புரம், பழைய விமான நிலைய சாலை, சர்ஜாபுரா சாலை...
ஓசூர் சாலை, துமகூரு சாலை, வெஸ்ட் ஆப் கார்ட் சாலை, கார்மல் ராம் மேம்பாலம், வெல்லார் ஜங்ஷன், பன்னரகட்டா சாலை, டெய்ரி சதுக்கம், ஹட்சன் சதுக்கம் உட்பட பல்வேறு சாலைகள் மற்றும் ஜங்ஷன்களில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது.
மாநில அரசு, போக்குவரத்து போலீசார், பெங்களூரு மாநகராட்சி ஆகிய நிர்வாகங்கள் எடுத்த பல நடவடிக்கைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.

