ADDED : ஜன 30, 2025 11:39 PM
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற, பெங்களூரு கரக திருவிழா ஏப்ரல் 4 முதல் 14 வரை நடக்கவுள்ளது.
பெங்களூரின் தர்மராய சுவாமி கோவில் சார்பில் நடக்கும் கரக திருவிழா பல நுாற்றாண்டு வரலாறு கொண்டதாகும். ஆண்டு தோறும் ஏப்ரலில் 11 நாட்கள் வெகு சிறப்பாக நடக்கும். இதை பார்க்க வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர்.
நடப்பாண்டு பெங்களூரு கரக திருவிழாவை ஏப்ரல் 4 முதல் 14 வரை நடத்த, கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக தயாராகி வருகிறது.
நேற்று முன் தினம் இரவு, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள், தர்மராய கோவில் நிர்வாகத்தினர் ஆலோசனை நடத்தினர். ஏற்கனவே 14 ஆண்டுகள் கரகம் சுமந்த ஞானேந்திரா, இம்முறையும் கரகம் சுமப்பார். இதன் மூலம், 15 ஆண்டுகள் திரவுபதி தேவி கரகம் சுமந்த பெருமை கிடைக்கும்.
இதற்கிடையே பெங்களூரு மாநகராட்சி மீது, தர்மராய சுவாமி கோவில் நிர்வாகம் அதிருப்தி அடைந்துள்ளது. கரக ஊர்வலம் செல்லும் எஸ்.பி., சாலையில் ஒயிட் டாப்பிங் பணிகளை மாநகராட்சி இன்னும் முடிக்கவில்லை. கரகத்துக்கு இரண்டு மாதங்களே உள்ளன. பணிகளை முடிக்காவிட்டால், கரகத்துக்கு இடையூறு ஏற்படும் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:
பெங்களூரு கரகம், மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். எட்டு நுாற்றாண்டு வரலாறு கொண்டது. ஆதி சக்தி சொரூபியான திரவுபதியை ஆராதிக்கும் நிகழ்ச்சியாகும். இதனை 'பெங்களூரின் கிராம உற்சவம்' என்றும் அழைக்கின்றனர்.
ஹிந்து, முஸ்லிம்களின் ஒற்றுமையை உணர்த்த, கரக திருவிழா கொண்டாடப்படுகிறது. கரகத்தை முன்னிட்டு, 10 நாட்களும் தர்மராய சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கும்.
மல்லிகைப்பூ கரகத்தை தலை மீது சுமந்த பூஜாரி, நடனமாடியபடி கோவிலில் இருந்து வெளியே வருவார். பல கோவில்களில் இருந்து, வேடதாரிகள் தர்மராய சுவாமி கோவிலுக்கு வருவர். மஸ்தான் சாப் தர்காவுக்கு கரகம் செல்லும். இங்கு கற்பூர ஆரத்தி எடுத்த பின், நகர் வலத்தை துவக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

