தெரு நாய்களுக்கு உணவு: பெங்களூரு மாநகராட்சி திட்டம்
தெரு நாய்களுக்கு உணவு: பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : ஜூலை 11, 2025 05:05 AM

பெங்களூரு, ஜூலை 11-
தெரு நாய்களுக்கு அசைவம் கலந்த உணவு வழங்கும் திட்டத்தை துவங்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன் வாயிலாக குழந்தைகளை தெரு நாய்கள் தாக்குவதை தடுக்க முடியும் என, மாநகராட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பெங்களூரில் கடந்த சில மாதங்களாகவே தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குழந்தைகளே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தடுக்க பெங்களூரு மாநகராட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இறுதியாக, தெரு நாய்களுக்கு உணவளிக்கும் புதிய திட்டத்தை துவங்க முன்வந்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சுகாதாரம், கால்நடை பராமரிப்பு சிறப்பு கமிஷனர் சுரால்கர் விகாஸ் கிஷோர் கூறியதாவது:
தெரு நாய்களுக்கு சரியாக சாப்பாடு கிடைப்பதில்லை. இதனால், அவை வெறிபிடித்த மாதிரி சாலையில் பசியுடன் அலைகின்றன. இச்சமயத்தில், அவை குழந்தைகளை தாக்குகின்றன. இதை தடுக்க, தெரு நாய்களுக்கு உணவு அளிக்கும் திட்டம் துவக்கப்பட உள்ளது.
இதனால் தெருநாய்களின் பசி அடங்கும். வெறிபிடித்த மாதிரி நடப்பதும் குறையும். இது, மாநகராட்சியின் கீழ் உள்ள எட்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும்.
மெனு ரெடி
இந்த திட்டத்திற்கு, மாநகராட்சி கால்நடை பராமரிப்பு துறையும் அனுமதி வழங்கி உள்ளது. தெரு நாய்களுக்கு முட்டை, கோழி இறைச்சி போன்ற அதிக சத்து நிறைந்த, 700 முதல் 750 கலோரிகள் உடைய உணவு வழங்கப்படும். இதற்கான மெனு ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, 2.88 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது. மண்டலங்கள் வாரியாக சமையலறைகள் உருவாக்கப்படும். இங்கு தயாரிக்கப்படும் உணவு, ஒப்பந்ததாரர் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக, நாய்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று வழங்கப்படும்.
உணவு வைக்கப்பட்ட இடம் சுத்தம் செய்யப்படும். ஒப்பந்தாரர்கள் ஒரு நாளைக்கு எத்தனை நாய்களுக்கு உணவு வழங்கினர் என்பது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
சோதனை வெற்றி
இந்த டெண்டர் ஒரு ஆண்டு அவகாசத்தில் வழங்கப்பட உள்ளது. ஒப்பந்ததாரர்களின் சேவை திருப்திகரமாக இருந்தால், மீண்டும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்படும். இதுகுறித்த முடிவை மாநகராட்சி தலைமை கமிஷனர் எடுப்பார்.
அதுமட்டுமின்றி, இத்திட்டத்தை சோதனை முறையில் ஏற்கனவே பரிசோதனை செய்துள்ளோம். கடந்த இரண்டு மாதங்களாக 1,000 நாய்களுக்கு உணவு அளித்துள்ளோம். இச்சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்தன. உணவை உட்கொண்ட தெரு நாய்கள், சாந்தமாக தெரிந்தன.
இவ்வாறு அவர் கூறினார்.