ஆங்கில புத்தாண்டு பாதுகாப்புக்கு 'பவுன்சர்'கள்; பெங்களூரு போலீஸ் புது 'ரூட்'
ஆங்கில புத்தாண்டு பாதுகாப்புக்கு 'பவுன்சர்'கள்; பெங்களூரு போலீஸ் புது 'ரூட்'
ADDED : டிச 11, 2024 11:54 PM

பெங்களூரு : ஆங்கில புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து 'பவுன்சர்'களுடன், பெங்களூரு மத்திய பிரிவு போலீசார் ஆலோசனை நடத்தினர்.
ஆங்கில புத்தாண்டு பிறப்பின்போது, என்னென்ன நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என இளம்தலைமுறையினர் இப்போதே ஆலோசனை செய்ய துவங்கி உள்ளனர். அதுபோன்று, பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ள, போலீசாரும் திட்டமிட்டு வருகின்றனர்.
வழக்கம்போல், பெங்களூரு எம்.ஜி., சாலை, பிரிகேட் சாலைகள் புத்தாண்டுக்கு தயாராகி வருகின்றன. இதையடுத்து, பெங்களூரு மத்திய பிரிவு டி.சி.பி., சேகர், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இம்முறை பவுன்சர்களை அழைத்து, ஆலோசனை நடத்தி உள்ளார். 'பப், பார் அண்ட் ரெஸ்டாரென்ட்களுக்கு வரும் இளம்பெண்களிடம் எப்படி நடந்து கொள்வது குறித்து அவர்களுக்கு டி.சி.பி., விளக்கினார்.
அதுபோன்று, பப், பார் அண்ட் ரெஸ்டாரென்ட் உரிமையாளர்கள், பார்ட்டி ஹால், தனியார் ஹோட்டல் மேலாளர்களுடன் நடந்த சந்திப்பில், குடித்துவிட்டு தவறாக நடந்து கொண்டவரை போலீசில் ஒப்படைப்பது; ஆங்கில புத்தாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
பின், டி.சி.பி., சேகர் கூறுகையில், ''ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்தாண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்போம். பார் மற்றும் உணவக உரிமையாளர்கள் கூட்டம் நடத்தி விவாதித்தோம். போலீசின் அனுமதி, நடைமுறை குறித்து பேசினோம். வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்,'' என்றார்.

