பிரதமர் மோடி பயணித்த சாலையில் ஜெலட்டின் குச்சிகளால் பதற்றம்
பிரதமர் மோடி பயணித்த சாலையில் ஜெலட்டின் குச்சிகளால் பதற்றம்
UPDATED : மே 10, 2026 07:44 PM
ADDED : மே 10, 2026 07:41 PM

பெங்களூரு: கர்நாடகாவில், பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த சாலையில், இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
கர்நாடகாவின் பெங்களூரில் இருந்து கனகபுரா செல்லும் சாலையில் உதயபுரா கிராமத்தில், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின், வாழும் கலை அமைப்பின் சர்வதேச மையம் உள்ளது. இந்த மையத்தின், 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியின் 70வது பிறந்தநாள் கொண்டாட்டம் (மே 10) நடந்தது.
சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். முன்னதாக, டில்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் எச்.ஏ.எல்., விமான நிலையம் வந்த அவர், அங்கு நடந்த பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சாலை மார்க்கமாக வாழும் கலை சர்வதேச மையத்திற்கு சென்றார்.
பிரதமர் வருகைக்கு முன், நைஸ் ரோட்டில் இருந்து, கனகபுரா ரோடு பிரியும் இடத்தில் இருந்து, வாழும் கலை மையம் வரை, ககலிபுரா போலீசார் சாலையின் இரு பக்கமும் சோதனை நடத்தினர். ககலிபுரா அருகே தத்தகுனி என்ற இடத்தில் சாலையோரம் ஒரு பிளாஸ்டிக் கவரில், இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பெங்களூரு தெற்கு எஸ்.பி., சீனிவாஸ் கவுடாவுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த எஸ்.பி., உள்ளிட்ட அதிகாரிகள் ஜெலட்டின் குச்சிகளை எடுத்து சென்றனர். இதனால் பிரதமர் பயணத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை. இது குறித்து விசாரிக்க, கனகபுரா டி.எஸ்.பி., சீனிவாஸ் தலைமையில், 50 போலீசார் அடங்கிய ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, (மே 10) காலை 7:30 மணிக்கு கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் மொபைல் போனுக்கு வந்த அழைப்பில், பிரதமர் மோடிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடக்கும், எச்.ஏ.எல்., மற்றும் வாழும் கலை அமைப்பின் சர்வதேச மையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மர்ம நபர் பேசினார்.
அழைப்பு வந்த நம்பரை வைத்து விசாரித்ததில், போனில் பேசியவர் கோரமங்களாவில் வசிக்கும் லோகித், 40, என்பது தெரிந்தது. அவர் கைது செய்யப்பட்டார். மனநலம் பாதிக்கப்பட்டுள்ள அவர், இதற்கு முன்பும், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது தெரிந்தது.
ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், லோகித்துக்கு தொடர்பு உள்ளதா என்று கண்டறிய, எஸ்.பி., சீனிவாச கவுடா, பெங்களூரு தெற்கு டி.சி.பி., முகமது சுஜிதா ஆகியோர் அவரிடம் விசாரித்தனர். ஆனால், அவருக்கு தொடர்பு இல்லை என்பது தெரிய வந்தது.
