கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
UPDATED : பிப் 11, 2025 02:07 PM
ADDED : பிப் 11, 2025 12:32 PM

பெங்களூரு; கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து,பெங்களூருவில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதை மக்கள் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளதால், இருக்கைகள் காலியாக இருக்கின்றன.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி, மெட்ரோ ரயில்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற முழக்கத்தை மக்கள் முன் வைத்துள்ளனர். சமூக வலைதளங்களில் இதை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றனர்.
கோரிக்கைகள் ஒரு பக்கம் இருக்கும் அதே வேளையில், பெங்களூரு மெட்ரோ ரயில்களில் வழக்கமாக காணப்படும் கூட்டம் இல்லை என்று பயணிகள் தெரிவித்துள்ளனர். எப்போதும் நிற்க முடியாத அளவுக்கு முண்டியக்கும் கூட்டம் இருப்பதை தான் பார்த்துள்ளோம்.
ஆனால் இப்போது பல இருக்கைகள் காலியாகவே இருக்கின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களையும் பார்க்க முடிவதில்லை என்று கூறி உள்ளனர்.
பெங்களூருவில் மெட்ரோ ரயில் கட்டண உயர்வு பிப்.9ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.