'கர்நாடக வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்கு அளவிடற்கரியது' நீதிபதியின் பேச்சுக்கு பெங்களூரு தமிழ் சங்கம் கண்டனம்
'கர்நாடக வளர்ச்சிக்கு தமிழர்கள் பங்கு அளவிடற்கரியது' நீதிபதியின் பேச்சுக்கு பெங்களூரு தமிழ் சங்கம் கண்டனம்
ADDED : டிச 01, 2024 04:13 AM

பெங்களூரு: 'ஆங்கிலேயர்களுக்கு தமிழர்கள் அடிமைகளாக இருந்தனர்' என கூறிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதியின் பேச்சுக்கு, பெங்களூரு தமிழ்ச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநில பெங்களூரு வழக்கறிஞர் சங்கம் சார்பில், நவ. 28ம் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா தின விழா, உயர் நீதிமன்ற வளாகத்தில் நடந்தது.
இதில், கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.அருண் பேசுகையில், 'பெங்களூரு கன்டோன்மென்ட் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சி செய்தபோது தமிழர்கள் அவர்களுக்கு அடிமைகளாக இருந்தனர்' என்று பேசியிருந்தார்.
அறிக்கை
இவரது பேச்சுக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத் தலைவர் கோ.தாமோதரன், செயலர் சம்பத் வெளியிட்டுள்ள அறிக்கை:
கர்நாடக மாநிலம் பிரிக்கப்படுவதற்கு முன்பு, 'மெட்ராஸ் ராஜதானி' என்று அழைக்கப்பட்டது. மொழி வாரியமாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், தமிழர்கள் கர்நாடக மாநில வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டனர். குறிப்பாக பெங்களூரு நகர்ப்புற வளர்ச்சிக்கு தமிழர்களின் உழைப்பு மிகவும் போற்றத்தக்கது.
இதுகுறித்து அன்றைய கர்நாடக முதல்வர் கெங்கல் அனுமந்தையா பேசுகையில், 'தமிழர்கள் கர்நாடக வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டு உள்ளனர்' என்று பாராட்டியிருந்தார்.
தங்க சுரங்கம்
கர்நாடக வளர்ச்சிக்கு தங்கவயல் தங்கசுரங்கத்தில் தமிழர்கள் பலர் உயிர் தியாகம் செய்து, பல்லாயிரம் அடிகளுக்கு கீழே சென்று தங்கப்பாளங்களை வெட்டி எடுத்து, நாட்டின் வளர்ச்சிக்கு மூலதனமாக இருந்தவர்கள்.
நாடு சுதந்திரம் பெற்றபோது, கோலார் தங்கவயல் தங்கத்தை தான் மூலதனமாக வைத்து, முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதுமட்டுமின்றி, நாடு சுதந்திரம் பெறுவதற்காக போராடியபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்கள், ஆயிரக்கணக்கானோர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிரை தியாகம் செய்துள்ளனர்.
கர்நாடகாவின் தலைமையகமான விதான் சவுதா, உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு இடங்களில் உள்ள பல கட்டடங்களில் தமிழருடைய பங்களிப்பு உள்ளது.
கர்நாடகா வாழ் தமிழர்கள், முழுக்க முழுக்க இந்த மண்ணிற்காக உழைத்து, மாநிலம் வளர்ச்சி பெறுவதற்காக பாடுபட்டு உள்ளனர்.
இத்தகைய வரலாறு தெரியாமல் பேசிய நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.