தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம் அறிவுரை
தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த பெங்களூரு குடிநீர் வாரியம் அறிவுரை
ADDED : ஜன 30, 2024 07:55 AM
பெங்களூரு : 'கோடைகாலம் நெருங்குவதால், குடிநீர் பயன்பாடு அதிகரிக்கும். எனவே தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியம் அறிவுறுத்தி உள்ளது.
இது தொடர்பாக, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
கோடைகாலம் நெருங்குகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதம், பயிர்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால், பெங்களூருக்கு தேவையான குடிநீர் வினியோகிப்பது, எங்களுக்கு சவாலாக இருக்கும்.
ஏப்ரல், மே மாதத்துக்கு பெங்களூருக்கு 2.42 டி.எம்.சி., தண்ணீர் ஒதுக்கும்படி, காவிரி நீர்ப்பாசன கார்ப்பரேஷனிடம், இரண்டு முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு
தண்ணீரை மிதமாக பயன்படுத்தும்படி, அனைத்து ஊடகங்களின் வழியாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். வாகனங்களை கழுவ, காவிரி குடிநீரை பயன்படுத்த கூடாது. குடிநீரை வீணாக்கினால், கோடைகாலத்தில் தொந்தரவாக இருக்கும்.
கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில், தற்போது 28 டி.எம்.சி., தண்ணீர் உள்ளது. பெங்களூரு நகருக்கு மாதந்தோறும் 1.6 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படும். இந்த கணக்குபடி பார்த்தால், மழைக்காலம் வரை 11 முதல் 12 டி.எம்.சி., தண்ணீர் தேவைப்படலாம்.
பல்வேறு இடங்களுக்கு, போர்வெல்கள் மூலமாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
சில வீடுகளில் காவிரி குடிநீர் இணைப்பு இல்லை. இந்த வீட்டினர் போர்வெல் தண்ணீரை பெறுகின்றனர்.
காவிரி ஐந்தாம் கட்ட பணிகளை, குடிநீர் வாரியம் தீவிரப்படுத்தியுள்ளது. பணிகள் முடிந்தால், எலஹங்கா, பேட்ராயனபுரா, பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர், மஹாதேவபுராவில் இணைக்கப்பட்ட, 110 கிராமங்களுக்கு காவிரி குடிநீர் கிடைக்கும்.
பெரிய டாங்கர்கள்
தற்போது இந்த கிராமங்களுக்கு, பெரிய டாங்கர்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வாஜரஹள்ளியில் இருந்து, டி.கே.ஹள்ளி பம்பிங் ஸ்டேஷனுக்கு, இணைப்பு ஏற்படுத்த 5,500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், பெரும்பாலும் முடிந்துள்ளன.
மஹாதேவபுரா மண்டலத்தின், சில பகுதிகளின் மக்கள் காவிரி குடிநீர் இணைப்பு பெற்றிருந்தும், சரியாக தண்ணீர் வினியோகிப்பதில்லை என, புகார் வந்துள்ளது. ஐந்தாம் கட்ட பணிகள் முடிந்த பின், தேவைக்கு தகுந்தபடி குடிநீர் கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.