தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் பெங்களூரு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் பெங்களூரு குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
ADDED : மார் 08, 2024 01:00 AM

பெங்களூரு, கர்நாடகாவில் நிலவும் வறட்சி காரணமாக, பெங்களூரு நகரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தில் பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலம் இதுவரை காணாத அளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
நடவடிக்கை
வருவாய் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் துமகூரு முதலிடம் வகிப்பதாகவும், இங்குள்ள 746 கிராமங்கள் அபாய நிலையில் உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
அதே போல உத்தர கன்னடா மாவட்டத்திலும் பல கிராமங்கள் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
பெங்களூரு நகரிலும், 120க்கும் மேற்பட்ட வார்டுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ இல்லமான பெங்களூரில் உள்ள கிருஷ்ணாவிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
துணை முதல்வர் சிவகுமாரின் இல்லம் உட்பட, பெங்களூரில் மட்டும், 3,000க்கும் அதிகமான போர்வெல்கள் வற்றி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை துணை முதல்வர் சிவகுமாரே ஒப்புக்கொண்டுள்ளார்.
நிலைமையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தண்ணீர் லாரி வினியோகத்தை முறைப்படுத்துவது, அடுக்குமாடி குடியிருப்புகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரை மறுசுத்திகரிப்பு செய்து, பயன்படுத்துவது உள்ளிட்ட வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது.
மாநிலத்தின் 236 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதில், 219 தாலுகாக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு நிலைமையை சமாளிக்க கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், உள்ளூர் எம்.எல்.ஏ.,க்கள் தலைமையில் பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.
வரும் கோடைக்காலம் மிக தீவிரமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், கர்நாடகா முழுதும் 7,082 கிராமங்கள், பெங்களூரு நகரம் உட்பட 1,193 வார்டுகளில் குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
பெங்களூரை பொறுத்தவரை, 2,600 மில்லியன் லிட்டர் முதல் 2,800 மில்லியன் லிட்டர் வரை தண்ணீர் ஒரு நாளில் தேவைப்படுகிறது.
கட்டணம்
இதில், 1,500 மில்லியன் லிட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தண்ணீர் லாரிகளின் விலை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக அதிகரித்து உள்ளது.
பெங்களூரில் 200க்கும் மேற்பட்ட தனியார் தண்ணீர் லாரிகள் இயங்கப்படுகின்றன. இவற்றுக்கான கட்டணங்களை மாவட்ட கலெக்டர் நிர்ணயித்துள்ளார்.
அதன்படி, 5 கி.மீ., தொலைவுக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் வினியோகம் செய்ய, 6,000 லிட்டர் லாரிக்கு 600 ரூபாய் என்றும், 8,000 லிட்டர் லாரிக்கு 700 ரூபாய் என்றும், 12,000 லிட்டர் லாரிக்கு 1,000 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஐந்து கி.மீ.,க்கு மேற்பட்ட துாரத்துக்கு முறையே 750, 850, 1,200 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுஉள்ளன.

