பேட்மின்டனில் ஜொலிக்கும் பெங்களூரின் பூர்விஷா ராம்
பேட்மின்டனில் ஜொலிக்கும் பெங்களூரின் பூர்விஷா ராம்
ADDED : நவ 22, 2024 07:23 AM

பேட்மின்டன் விளையாடும் பெண் வீராங்கனை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பி.வி.சிந்து தான். அமைதியான சுபாவம் கொண்ட அவர், எதிரணி வீராங்கனைகளுக்கு தனது பேட்மின்டன் பேட் மூலம் பதிலடி கொடுக்க கூடியவர். இவரது பாணியில் சில பேட்மின்டன் வீராங்கனைகள், எதிரணிகளுக்கு பேட் மூலம் பதில் கொடுக்கின்றனர். இவர்களில் ஒருவரான கர்நாடக வீராங்கனை பற்றி பார்ப்போம்.
பெங்களூரை சேர்ந்தவர் பூர்விஷா ராம். இவர், 1995ல் பிறந்தவர். 6 வயதில் அவருக்கு பேட்மின்டன் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது. அவரது ஆர்வத்திற்கு பெற்றோரும் தடையாக இருக்கவில்லை. 2005ம் ஆண்டு பயிற்சிக்கு சேர்ந்தார். பயிற்சி, மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடிதால், இரண்டே ஆண்டில் கர்நாடக பேட்மின்டன் அணியில் இடம் கிடைத்தது.
கோவாவில் 2009ல் நடந்த, தேசிய விளையாட்டு திருவிழாவில், வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடினார். 2015 முதல் இந்திய அணிக்காக, வெளிநாட்டு தொடர்களில் விளையாட ஆரம்பித்தார். 2015ல் பூர்விஷா - சிக்கி ரெட்டி ஜோடி ஈரான் நாட்டின் சொரயோ அக்கி - நேகின் அம்ரிபுர் ஜோடியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் வென்றது.
அதே ஆண்டில் பக்ரைனில் நடந்த போட்டியில் பூர்விஷா - ஆரத்தி சாரா சுனில் ஜோடி, பாகிஸ்தானின் பல்வசா பஷீர் - சாரா முக்மந்த் ஜோடியை வீழ்த்தி வென்றது. கடந்த 2020ல் உகாண்டாவில் நடந்த போட்டியில் பூர்விஷா - மேகனா ஜெகம்புடி ஜோடியால், பெரு அணியின் டேனியல் மசிஸ் - டேகினா நிசிமுரா வீழ்த்தப்பட்டனர். 2022ல் நடந்த கேம்ரூன் இன்டர்நேஷனல் போட்டியில், தனது இணையான ஸ்ரீவைத்யாவுடன் இணைந்து பூர்விஷா, ஆஸ்திரேலியாவின் கஸ்துாரி ராதாகிருஷ்ணன் - வெனோசா ராதாகிருஷ்ணன் ஜோடியை வீழ்த்தினார்.
கடந்த 2016ல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டாலும், அதில் இருந்து விரைவாக மீண்டு வந்து, பேட்மின்டன் விளையாடினார் பூர்விஷா. தற்போது பேட்மின்டனில் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இன்னும் பல ஆண்டுகள் விளையாடி அவர், நிறைய பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பதே அனைவரின் ஆசையும். - நமது நிருபர் -