பெங்களூரில் கம்பாலா போட்டிக்கு தடை; கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 'பீட்டா' மனு
பெங்களூரில் கம்பாலா போட்டிக்கு தடை; கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 'பீட்டா' மனு
ADDED : அக் 22, 2024 12:43 AM
பெங்களூரு : பெங்களூரில் கம்பாலா போட்டி நடத்த தடை விதிக்க கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல அமைப்பான பீட்டா மனு தாக்கல் செய்து உள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போன்று, கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்கள், கேரளாவின் காசர்கோடில் கம்பாலா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு ஜோடி எருதுகளை சேற்றில் ஓட விடுவர். எந்த ஜோடி எருது முதலிடம் வருகிறதோ அதற்கு பரிசு வழங்கப்படும்.
கடந்த ஆண்டு முதல்முறையாக பெங்களூரில் கம்பாலா போட்டி நடந்தது. இதற்கு எதிர்பார்த்ததை விட வரவேற்பு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு வரும் 26ம் தேதி பெங்களூரில் மீண்டும் கம்பாலா போட்டி நடத்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் திடீரென அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், பெங்களூரில் கம்பாலா போட்டி நடத்த தடை விதிக்க கோரி, விலங்குகள் நல அமைப்பான பீட்டா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தது. தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் விசாரித்தனர்.
மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் தயான் சின்னப்பா வாதாடுகையில், ''கம்பாலா போட்டியின் மூலம், எருதுகள் துன்புறுத்தப்படுகின்றன. பெங்களூரில் போட்டி நடத்தப்படுவதால், கடலோர மாவட்டங்களில் இருந்து எருதுகள் அழைத்து விடப்படுகின்றன.
''இது, எருதுகளை துன்புறுத்தும் செயல். இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும். கடந்த ஜூலையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் விசாரணைக்கு வரவில்லை. எனவே, இப்போது தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
வாதத்தை கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தனர்.