எனக்கு 'சீட்' தராவிட்டால் துரோகம்! தாவணகெரே காங்கிரசில் பரபரப்பு
எனக்கு 'சீட்' தராவிட்டால் துரோகம்! தாவணகெரே காங்கிரசில் பரபரப்பு
ADDED : பிப் 28, 2024 05:18 AM

தாவணகெரே, : ''லோக்சபா தேர்தலில் எனக்கு 'சீட்' தராவிட்டால், அது ஜனநாயக துரோகம்,'' என, தாவணகெரே காங்கிரஸ் 'சீட்' எதிர்பார்க்கும் வினய்குமார் கூறி உள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தாவணகெரே தொகுதிக்கு பா.ஜ., - காங்கிரஸ் கட்சிகளில், 'சீட்'டுக்கு கடும் போட்டி எழுந்து உள்ளது.
பா.ஜ., - எம்.பி., சித்தேஸ்வர், முன்னாள் அமைச்சர் ரேணுகாச்சார்யா, முன்னாள் எம்.எல்.ஏ., மாடால் விருபாக் ஷப்பா மகன் மாடால் மல்லிகார்ஜுன் என, பா.ஜ., சார்பில் போட்டியிட விரும்புவோர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அதேபோல் காங்கிரஸ் 'சீட்' கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம் நடத்தி வரும் வினய்குமார் என்பவர், தொகுதி முழுதும் சுற்றி வந்து, மக்களை சந்திக்கிறார்.
இவருக்கு சென்னகிரி காங்கிரஸ் எம்.எல்.ஏ., பசவராஜ் சிவகங்காவின் ஆதரவும் உள்ளது.
ஆனால் தாவணகெரே அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ் மூத்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, மருமகள் பிரபா மல்லிகார்ஜுனுக்கு 'சீட்' வாங்கிக் கொடுக்க நினைக்கிறார். பிரபா அல்லது வினய்குமார் இருவரில் ஒருவருக்கு, காங்கிரஸ் 'சீட்' என்பது உறுதியாகி உள்ளது.
“சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தொகுதி முழுவதும் சுற்றி, மக்களை சந்தித்து உள்ளேன். மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்தி வருகிறேன்.
ஆனால் இப்போது சிலர் 'சீட்' கேட்கின்றனர். ஒருவேளை எனக்கு 'சீட்' தராவிட்டால், அது ஜனநாயக துரோகம்,” என, வினய்குமார் கூறி உள்ளார்.

