வயநாட்டை விட்டு நீங்காத ஆபத்து; பேரிடர் மீட்புக்குழு விடுத்த புது எச்சரிக்கை!
வயநாட்டை விட்டு நீங்காத ஆபத்து; பேரிடர் மீட்புக்குழு விடுத்த புது எச்சரிக்கை!
ADDED : செப் 02, 2024 10:22 AM

வயநாடு: வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்கு பிறகு, அங்கு இருக்கும் ராட்சத பாறைகள் உள்ளிட்டவற்றால் பெரும் ஆபத்து இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட மழை, வெள்ளம் பயங்கர நிலச்சரிவால் அப்பகுதியே நிலைகுலைந்து போயுள்ளது. மலை கிராமங்கள் மண்ணுக்கு அடியும் அப்படியே புதையுண்டது. இதனால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக வீடுகளும் கட்டிக் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சேதமடைந்த சாலைகள் உள்ளிட்டவற்றை சீரமைக்கும் பணிகளும் துரிதகதியில் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இந்தப் பேரிடருக்குப் பிறகு, அங்கிருக்கும் ராட்சத பாறைகளால், அங்குள்ளவர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக கேரள மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக மொகாலியைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., வல்லுநர்கள், கேரள பல்கலையினர் இணைந்து நடத்திய ஆய்வில், ராட்ச பாறைகள் மற்றும் பேரிடரால் உருவான கழிவுகளினால், மீண்டும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும், எதிர்வர இருக்கும் வடகிழக்கு பருவழை வர உள்ள நிலையில், இதனால் மீண்டும் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆற்றுப் பகுதிகளில் இருக்கும் இந்தப் பாறைகள் சரிந்து விழுந்து, நீர் செல்வது தடைபட்டு, மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையால் வயநாடு மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.