2 நாளில் வீடு திரும்புவார் பகவந்த் மான் மருத்துவமனையில் சந்தித்த சிசோடியா தகவல்
2 நாளில் வீடு திரும்புவார் பகவந்த் மான் மருத்துவமனையில் சந்தித்த சிசோடியா தகவல்
ADDED : செப் 06, 2025 11:25 PM

சண்டிகர்:“பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உடல்நிலை சீராக இருக்கிறது. இரண்டு நாட்கள் ஒய்வுக்குப் பின், வழக்கமான பணிகளுக்குத் திரும்புவார்,” என, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா கூறினார்.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்,51, உடல் நலக்குறைவு காரணமாக மொஹாலி போர்டிஸ் மருத்துவமனையில் நேற்று முன் தினம் மாலை அனுமதிக்கப்பட்டார்.
சோர்வு ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா நேற்று, மருத்துவமனையில் பகவந்த் மானை சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார். மேலும், டாக்டர்களிடம் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.
மருத்துவமனை வளாகத்தில் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் கூறிய தாவது:
பகவந்த் மான் ஏற்கனவே மூன்று நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதோடு, வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் எடுத்து வந்தார். இந்நிலையில்தான் உடல் சோர்வு மற்றும் இதயத் துடிப்பு குறைந்ததால், நேற்று முன் தினம் மாலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
டாக்டர்கள் பகவந்த் மானை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவருக்கு எலக்ட்ரோலைட் சமநிலையின்மை ஏற்பட்டு இருந்தது.
அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. இரண்டு நாட்கள் மருத்துவமனையிலேயே ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின், வழக்கமான பணிகளுக்கு பகவந்த்மான் திரும்புவார்.
நான் சந்தித்த போது, மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து கேட்டறிந்தார். அதிகாரிகளும் அவருக்கு உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒத்திவைப்பு மாநிலத்தின் வெள்ள நிலைமை குறித்து விவாதிக்க நேற்று முன் தினம் மாலை நடக்கவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதேபோல, டில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிடவும் பகவந்த் மான் செல்லவில்லை.
அமைச்சர் ஹர்பால் சிங் சீமா உட்பட அமைச்சர்கள், உயர் அதிகாரிகள், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மருத்துவமனைக்கு வந்து, பகவந்த் மான் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.