ஹைதராபாதுக்கு பதில் பாக்ய நகர் ஆர்.எஸ்.எஸ்., அழைப்பில் சர்ச்சை
ஹைதராபாதுக்கு பதில் பாக்ய நகர் ஆர்.எஸ்.எஸ்., அழைப்பில் சர்ச்சை
UPDATED : நவ 21, 2024 04:54 AM
ADDED : நவ 21, 2024 02:01 AM

ஹைதராபாத், தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இதன் தலைநகராக உள்ள ஹைதராபாதின் பெயரை பாக்ய நகர் என மாற்ற, சில ஆண்டுகளாக பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும், 'ஆட்சிக்கு வந்தால் ஹைதராபாத் பெயர் பாக்ய நகர் என மாற்றப்படும்' என, பா.ஜ., வாக்குறுதி அளித்திருந்தது.
இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கலாசார பிரிவான, 'பிரஜ்னா ப்ரவா' சார்பில், ஹைதராபாதில், 'லோக்மந்தன்' என்ற பெயரில், நான்கு நாட்கள் கருத்தரங்கு நடக்கவுள்ளது.
இந்நிகழ்ச்சிக்காக ஆர்.எஸ்.எஸ்., வெளியிட்ட விளம்பரம், துண்டு பிரசுரங்கள் என அனைத்திலும், ஹைதராபாத் என்பதற்கு பதில், 'பாக்ய நகர் மஹா நகர்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
லோக்மந்தன் என்பது, நாட்டில் உள்ள கலைஞர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர், சமூக மற்றும் கலாசார சவால்கள் பற்றி விவாதிக்கும் கருத்தரங்கு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் முன்னிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்மு துவங்கி வைக்க உள்ளார்.
இதில் பங்கேற்க, முதல்வர் ரேவந்த் ரெட்டி முதலில் விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், வேலைப்பளு காரணமாக அவருக்கு பதில் மாநில அமைச்சர் பங்கேற்க உள்ளார்.
லோக்மந்தன் நிகழ்ச்சி குறித்து, பிரஜ்னா ப்ரவா பிரிவு தலைவர் நந்தகுமார் கூறுகையில், ''எங்களை பொறுத்தவரை, ஹைதராபாத் நகரம் பாக்ய நகர் மஹா நகர் என்ற பெயரிலேயே இருக்கிறது. எதிர் காலத்திலும் அப்படியே இருக்கும்.
''இதை முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. பாக்ய நகர் என்ற பெயர், பழங்கால பாக்ய லட்சுமி கோவிலில் இருந்து வந்தது. இது அந்த இடத்தின் பாரதப் பெயர்,'' என்றார்.