அரசு நிகழ்ச்சிகளில் பாரத மாதா படத்தை அனுமதிக்க முடியாது: கேரளா திட்டவட்டம்
அரசு நிகழ்ச்சிகளில் பாரத மாதா படத்தை அனுமதிக்க முடியாது: கேரளா திட்டவட்டம்
ADDED : ஜூன் 07, 2025 01:19 AM

திருவனந்தபுரம்: கேரளாவில், கவர்னர் மாளிகையில் நடந்த சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சியில், பாரத மாதாவின் உருவப்படம் இடம்பெற்ற நிலையில், 'அரசு நிகழ்வுகளில் அந்த படத்தை அனுமதிக்க முடியாது' என, கேரள அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில், நேற்று முன்தினம் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்கும்படி, கேரள வேளாண் அமைச்சர் பி.பிரசாத், கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நிகழ்ச்சி நிரலில், பாரத மாதாவின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்துவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சமரசம் இல்லை
இதனால் அதிருப்தி அடைந்த கேரள அமைச்சர்கள் பி.பிரசாத், வி.சிவன்குட்டி, நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுகுறித்து கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், 'யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். பாரத மாதா விவகாரத்தில் சமரசத்துக்கு இடமே இல்லை' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து, திட்டமிட்டபடி, கவர்னர் ராஜேந்திர அர்லேகர் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள வேளாண் அமைச்சர் பி.பிரசாத் நேற்று கூறியதாவது:
சுற்றுச்சூழல் தின விழா தொடர்பாக, எங்களுக்கு முதலில் அனுப்பப்பட்ட அழைப்பிதழில், பாரத மாதா குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. சிறிது நேரத்துக்குப் பின், திருத்தப்பட்ட அழைப்பிதழ் வந்தது.
அதில்தான், பாரத மாதா உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு மரியாதை செலுத்த முடியாது என, தெரிவித்தேன். நிகழ்ச்சி நிரலில் இருந்து அதை நீக்கும்படி வலியுறுத்தினேன். ஆனால், அதை கவர்னர் மாளிகை ஏற்கவில்லை.
எப்படி பயன்படுத்தலாம்?
அரசியலமைப்பு சட்டத்தாலோ அல்லது ஆட்சியில் உள்ள எந்த அரசாலோ, பாரத மாதா உருவப்படம் அதிகாரப்பூர்வமாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், அரசு நிகழ்ச்சியில் அதை எப்படி பயன்படுத்தலாம்?
பாரத மாதா கையில் வைத்திருக்கும் கொடி நம் தேசியக்கொடி அல்ல. அது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கொடி. கவர்னரும், அந்த அமைப்பும், தனிப்பட்ட நிகழ்ச்சியில் அதை பயன்படுத்தலாம். ஆனால், அரசு நிகழ்ச்சியில் அனுமதிக்க முடியாது.
நாட்டின் ஜனாதிபதிகள், கேரளாவின் முந்தைய கவர்னர்கள் யாரும் பாரத மாதாவின் படத்தை அரசு நிகழ்ச்சியில் பயன்படுத்தாத நிலையில், கவர்னர் ராஜேந்திர அர்லேகர் மட்டும் பயன்படுத்தியது ஏன்?
கவர்னர் என்பவர், அரசியலுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளை அரசியல் நிகழ்ச்சிகளாக மாற்ற கவர்னர் முயற்சிக்கக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.