'இ - 20' பெட்ரோல் குறித்த வீடியோ தவறானது என்கிறது பாரத் பெட்ரோலியம்
'இ - 20' பெட்ரோல் குறித்த வீடியோ தவறானது என்கிறது பாரத் பெட்ரோலியம்
ADDED : ஜூன் 19, 2026 02:18 AM

மும்பை: எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட காரில், பெட்ரோல் டேங்க் மூடியை சுற்றி எறும்புகள் ஊர்ந்து சென்ற வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அத்தகவலை மறுத்துள்ள, 'பாரத் பெட் ரோலியம்', அறிவியல் பூர்வ விளக்கமளித்துள்ளது.
பெட்ரோலுடன் தற்போது, 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. இது, 'இ - 20' பெட்ரோல் என்று அழைக்கப்படுகிறது. இந்த எத்தனால், கரும்பு மற்றும் மக்காச் சோளத்தில் இருந்து பெறப்படுகிறது.
தற்போது, 85 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலும் டில்லியில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
கச்சா எண்ணெய்க்காக வெளிநாட்டு சார்பை நம்பி இருப்பதை குறைக்கவும், லட்சக்கணக்கான கோடி ரூபாய் அன்னிய செலாவணியை சேமிக்கவும் இத்திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் மாசும் பல மடங்கு குறையும்.
இந்நிலையில், 'இ - 20' பெட்ரோல் பயன்படுத்தப்பட்ட காரில், பெட்ரோல் டேங்கின் மூடியை சுற்றி எறும்புகள் மொய்த்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் சமீபத்தில் பரவியது.
'எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் எறும்புகள் மொய்த்ததற்கும் தொடர்பில்லை' என, 'பாரத் பெட்ரோலியம்' கூறியுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோலுடன் கலக்க பயன்படும் எரிபொருள் தர எத்தனால், நொதித்தல் மற்றும் காய்ச்சி பிரித்தெடுக்கும் முறைகளின் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்த செயல்முறைகளின் இறுதி தயாரிப்பில் சர்க்கரை சத்துகள் எதுவும் மீதமிருக்காது.
குறிப்பாக எத்தனாலில் பூச்சிகளை விலக்கி வைக்கும் தன்மை கொண்ட கலவைகள் சேர்க்கப்படுகின்றன. பெட்ரோலுடன் கலக்கப்பட்ட பின், பெட்ரோலின் இயல்பான ஹைட்ரோ கார்பன் மணமே அதிகம் இருக்கும். எத்தனாலின் மணம் கூட இருக்காது.
மேலும், எத்தனால் கலந்த பெட்ரோல், வழக்கமான பெட்ரோலை விட குறைவான எரிபொருள் ஆவியையே உருவாக்கும்.
எறும்புகள் அல்லது பிற பூச்சிகளை ஈர்ப்பதற்குரிய எந்த விஷயமும், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இல்லை. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் ஆதாரமற்றவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
