sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விருது மழை! : 3 பேருக்கு பாரத ரத்னா

/

விருது மழை! : 3 பேருக்கு பாரத ரத்னா

விருது மழை! : 3 பேருக்கு பாரத ரத்னா

விருது மழை! : 3 பேருக்கு பாரத ரத்னா

18


UPDATED : பிப் 12, 2024 02:40 AM

ADDED : பிப் 09, 2024 11:55 PM

Google News

UPDATED : பிப் 12, 2024 02:40 AM ADDED : பிப் 09, 2024 11:55 PM

18


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு நாட்டின் மிக உயர்ந்த விருது

வழங்கப்படுவது இதுவே முதல் முறை.

அவரவர் துறையில் சாதனை படைத்து நாட்டின் அடையாளமாக திகழ்ந்தவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் ஆகிய இருவருக்கும் சமீபத்தில் தான் இவ்விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நரசிம்ம ராவ், சரண் சிங், சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்தார்.

அவர் கூறியதாவது:நாட்டின் வளர்ச்சிக்காக ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக சரண் சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ.,வாக, உத்தர பிரதேச முதல்வராக, மத்திய உள்துறை அமைச்சராக பணியாற்றிய போது நாட்டின் வளர்ச்சியை கட்டியெழுப்பும் பணியை அவர் விரைவுபடுத்தினார். குறிப்பாக, 1975ல் இந்திரா அறிவித்த அவசரநிலையின் போது, விவசாயிகளுக்காகவும், ஜனநாயகத்தை கட்டிக்காக்கவும் அவர் காட்டிய அர்ப்பணிப்பு, இந்த தேசத்துக்கு புதிய உத்வேகத்தை அளித்தது.

பி.வி.நரசிம்ம ராவ் சிறந்த அறிஞராக, அரசியல்வாதியாக பல்வேறு பதவிகளில் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கினார். அவரது தொலைநோக்கு பார்வை, நம் நாட்டை பொருளாதார ரீதியாக முன்னேற்றியதுடன், செழிப்பான வளர்ச்சிக்கு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது.அவர் பிரதமராக பதவி வகித்த காலத்தில் தான், சர்வதேச சந்தைக்கு இந்தியாவின் கதவுகளை திறந்து விட்டு, பொருளாதார வளர்ச்சியின் புதிய சகாப்தத்தை துவக்கி வைத்தார். வெளியுறவுக் கொள்கை, மொழி மற்றும் கல்வித்துறைகளில் அவரது பங்களிப்பு நரசிம்ம ராவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின.

வேளாண் துறையில் நம் நாடு மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்ட காலத்தில், உணவு பாதுகாப்பில் நாம் தன்னிறைவு பெற எம்.எஸ்.சுவாமிநாதன் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவரது கடுமையான முயற்சிகள் நம் விவசாயத்துறையை நவீனமயமாக்கியது.ஒரு கண்டுபிடிப்பாளராகவும், வழிகாட்டியாகவும், பல மாணவர்களிடையே கற்றல் மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பவராகவும் அவரது விலைமதிப்பற்ற பணியை இந்த அரசு அங்கீகரிக்கிறது. சுவாமிநாதனின் தொலைநோக்குப் பார்வை, நம் நாட்டின் விவசாயத்தை மாற்றியமைத்தது மட்டுமல்லாமல், தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துள்ளது. இவ்வறு பிரதமர் கூறினார்.

சோனியா உள்ளிட்ட பல்வேறு கட்சி பிரமுகர்களும், விருது அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு சொந்தக்காரர்


Image 1230257

நரசிம்ம ராவ், 1921, ஜூன் 28ல் தற்போதைய தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் பிறந்தார். மும்பையில் சட்டம் பயின்றார். இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். இந்திய விடுதலை போராட்டத்திற்காக காங்., கட்சியில் இணைந்தார். ஆந்திர சட்டசபையில் பல்வேறு துறையில் அமைச்சராக இருந்தார். 1971ல் ஆந்திர முதல்வரானார். பிரதமர் ராஜிவ் அமைச்சரவையில் உள்துறை, ராணுவம், வெளியுறவுத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார். 1991 ஜூன் 21 முதல் 1996, மே 16 வரை இந்தியாவின் பிரதமாக இருந்தார். 2004 டிச., 23ல் டில்லியில் காலமானார்.

விடுதலைக்காக சிறை சென்றவர்


Image 1230258

உ.பி.,யில் பிறந்தவர் சரண் சிங். ஆக்ரா பல்கலையில் எம்.ஏ., முதுகலை, சட்டம் பயின்றார். இந்திய விடுதலைக்காக போராடினார். இதற்காக பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். 1930ல், 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இந்திய விடுதலைக்கு பின் 1967ல் காங்., கட்சியில் இருந்து விலகிய சரண் சிங், 'பாரதிய கிராந்தி தளம்' கட்சியை துவக்கினார். விவசாயிகளுக்காக போராடினார். 1967ல் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற இவர், உ.பி.,யின் ஐந்தாவது முதல்வராக பதவியேற்றார். பின், 1970ல் மீண்டும் உ.பி., முதல்வரானார். 1977ல் ஜனதா கட்சியில் இணைந்த சரண் சிங், பிரதமர் மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் உள்துறை அமைச்சர், துணை பிரதமர், நிதி அமைச்சர் என முக்கிய பொறுப்பு வகித்தார்.

பின், 1979ல் இந்தியாவின் ஐந்தாவது பிரதமராக பதவி வகித்தார். 1987, மே 29ல் தன் 84வது வயதில் டில்லியில் காலமானார்.

'பசுமை புரட்சி' நாயகர்


Image 1230259

இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் தமிழகத்தின் விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன். 1950களில் நாட்டில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வு கண்டார். இவரது ஆராய்ச்சிகளின் விளைவாக கோதுமை, நெல், உருளைக்கிழங்கு உற்பத்தி அதிகரித்தது. 10 ஆண்டுகளில் கோதுமை மகசூல் இரட்டிப்பானது. உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது.கடந்த 1925 ஆக., 7ல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிறந்தார். சென்னையில் 1940 - 44ல் விவசாய கல்லுாரியில் பட்டம் பெற்றார். 1952ல் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றார். இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து பல்வேறு தாவரங்களின் மரபணு குறித்த ஆய்வு மேற்கொண்டார். நெல், கோதுமைக்கான வீரிய வித்துக்களை உருவாக்கினார். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் விவசாயம் செய்தல், விவசாய தேவைகளுக்கு செயற்கைக்கோள் புள்ளி விபரங்களை பயன்படுத்துதல், தொடர்ந்து ஒரே விதமான பயிரை சாகுபடி செய்யாமல் சுழற்சி முறையை பின்பற்றுதல் என பல புதுமைகளை புகுத்தினார். பெண்களுக்கு சுயவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, ஏழைகளின் பசியை போக்குதல், சுகாதாரமான குடிநீர், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், அணுசக்தியை பாதுகாப்பான வழியில் பயன்படுத்துதல் போன்றவை இவரது முக்கிய நோக்கங்களாக இருந்தன. 2023, செப்., 28ல் தன் 98வது வயதில் சென்னையில் காலமானார்.

இந்தாண்டு தான் அதிகம்


பல்வேறு துறைகளில் சிறப்பான சேவையாற்றியவர்களுக்கு, நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. ஜனாதிபதியிடம் பிரதமரின் நேரடி பரிந்துரையின்படி இந்த விருது அளிக்கப்படுகிறது. கடந்த 1954ல் பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் என்ற இரண்டு உயரிய விருதுகளை மத்திய அரசு நிறுவியது. ஒரு சில ஆண்டுகள் ஒன்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தாலும், சில ஆண்டுகளில் யாருடைய பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்படாமலும் இருந்துள்ளன.கடைசியாக, 2019ல் பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. பூபேந்திர குமார் ஹஸாரிகா மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா அதே ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது இந்தாண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஹார் முன்னாள் முதல்வரும், சமூக சீர்திருத்தவாதியுமான கர்ப்பூரி தாக்குர் மற்றும் பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு இந்த விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, நாட்டின் பொருளாதார சீர்திருத்தத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், சரண் சிங் மற்றும் விவசாயத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி, நாட்டின் உணவு உற்பத்தியை உயர்த்தியவரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு, மறைவுக்கு பிறகான பாரத ரத்னா விருது நேற்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு முன் அதிகபட்சமாக 1999ல், ஜெயப்பிரகாஷ் நாராயண், பேராசிரியர் அமர்த்யா சென், லோக்பிரிய கோபிநாத் போர்டோலாய், பண்டிட் ரவிசங்கர் என நான்கு பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் பின், இந்த ஆண்டு ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது நிறுவப்பட்டதில் இருந்து இதுவரை, 53 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளன.

நால்வர் அரசியல்வாதிகள்


நடப்பாண்டு பாரத ரத்னா விருது பெறும் ஐந்து பேரில், நால்வர் அரசியல்வாதிகள்; ஒருவர் விஞ்ஞானி. எந்த கட்சி மத்தியில் ஆட்சி செய்கிறதோ, அதை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கு விருது வழங்குவது வாடிக்கை. பிரதமர் மோடி அதை மாற்றி, அவரது கட்சியை சாராத மூன்று தலைவர்களுக்கு விருது அறிவித்துள்ளார். வரும் தேர்தலில் இது பா.ஜ.,வுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்க்கட்சிகள் கவலை அடைந்துள்ளன.






      Dinamalar
      Follow us