மே.வங்கத்தில் யாத்திரையின் போது ராகுல் கார் மீது தாக்குதலா?: காங்., மறுப்பு
மே.வங்கத்தில் யாத்திரையின் போது ராகுல் கார் மீது தாக்குதலா?: காங்., மறுப்பு
UPDATED : ஜன 31, 2024 04:08 PM
ADDED : ஜன 31, 2024 02:40 PM

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் மால்டாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் யாத்திரை மேற்கொண்டிருந்த போது, கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன என செய்திகள் வெளியாகியது. மேற்கு வங்கத்தில் ராகுலின் காரின் மீது தாக்குதல் நடத்தப்பட வில்லை என தமிழக காங்கிரஸ் சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். மேற்குவங்க மாநிலம் மால்டாவில் இன்று (ஜன.,31) யாத்திரை மேற்கொண்டிருந்த போது ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் சேதமடைந்தன என செய்திகள் வெளியானது.
மறுப்பு
இது குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுலை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுலின் கார் முன் அவரை சந்திக்க வந்தார். இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது.
அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ராகுல் நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர். பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
இது குறித்து மேற்கு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‛‛ மேற்கு வங்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், ராகுலின் காரின் கண்ணாடி உடைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பாதுகாப்பு குறைபாடு தான் இதற்குக் காரணம்'' என கூறினர்.
சவுத்ரி கேள்வி
இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: மணிப்பூர் மற்றும் அசாமில் யாத்திரைக்கு இடையூறுகள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் மேற்கு வங்கத்தில் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ராகுலை வரவேற்று பேனர்கள் வைத்து இருந்தனர். அதனை கிழித்தெறிந்தது யார்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.