சிவராத்திரியில் 11 மணி நேரம் 6 கோவில்களில் பரதநாட்டியம்
சிவராத்திரியில் 11 மணி நேரம் 6 கோவில்களில் பரதநாட்டியம்
ADDED : மார் 09, 2024 11:03 PM

ஷிவமொகா: மஹா சிவராத்திரியை ஒட்டி கர்நாடகாவின் ஆறு கோவில்களில் 11 மணி நேரம் பரதநாட்டியம் நடந்தது.
ஷிவமொகாவின் சாகரில் வசிப்பவர் ஜனார்த்தன். தீவிர சிவ பக்தர். 'சிவ ஜாகரனே' என்ற பெயரில் அமைப்பை நடத்துகிறார்.
மஹா சிவராத்திரியான நேற்று முன்தினம் தனது அமைப்பில் உள்ள, பரதநாட்டிய கலைஞர்களான சமன்விதா, ராஜலட்சுமி, காவ்யா, நந்தினி, சவுக்யா, பூஜா உள்ளிட்டோரிடம், சிவனுக்கு மரியாதை செல்லும் விதமாக, ஆறு கோவில்களில் இரவு முழுவதும் பரதநாட்டியம் ஆட, ஜனார்த்தன் கேட்டு இருந்தார்.
இதன்படி சாகரில் உள்ள கணபதி கோவில், திரயம்பகேஸ்வரா கோவில், எலஹலே சிவா கோவில், இக்கேரி அகோரேஸ்வரா கோவில், ஸ்ரீவந்தே திருப்புரந்தகேஸ்வரா கோவில், நாகேஸ்வரா கோவில்களில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு பரதநாட்டியம் துவங்கியது.
நேற்று காலை 5:00 மணி வரை தொடர்ந்து 11 மணி நேரம், பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. கோவில்களுக்கு வந்த பக்தர்கள், பரதநாட்டியத்தையும் ரசித்தனர்.
இதுகுறித்து ஜனார்த்தன் கூறுகையில், ''தொடர்ந்து 11 மணி நேரம் பரதநாட்டியம் ஆடியது, எங்கள் அமைப்பின் புதிய முயற்சி.
''இதற்கு முன்பு கர்நாடகாவில், எந்த அமைப்பும், இப்படி ஒரு முயற்சி செய்தது இல்லை. நடனம் மூலம் சிவனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, பரதநாட்டியம் நடத்தினோம். வரும் நாட்களிலும் ஏதாவது புதிய முயற்சி செய்வோம்,'' என்றார்.

