ADDED : ஜன 28, 2025 06:27 AM

பெங்களூரு, : விதான் சவுதா வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட புவனேஸ்வரி சிலையை, முதல்வர் சித்தராமையா நேற்று திறந்துவைத்தார்.
பெங்களூரு, விதான்சவுதா வளாகத்தில், மேற்கு நுழைவாயிலில் புதிதாக புவனேஸ்வரி சிலை அமைக்கப்பட்டது. 43.6 அடி உயரத்தில், வெண்கலத்தால் ஆன புவனேஸ்வரி சிலையை, முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
அப்போது சபாநாயகர் காதர், துணை முதல்வர் சிவகுமார் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநில கன்னடம், கலாசாரத்துறை அமைச்சர் சிவராஜ் தங்கடகி பேசியதாவது:
சிற்பி ஸ்ரீதர் என்பவர், இந்த சிலையை வடிவமைத்தார். அவருக்கு நுாற்றுக்கணக்கான சிற்பிகள், வல்லுனர்கள், கலைஞர்கள் உதவியாக இருந்தனர். இதை செய்து முடிக்க 12 மாதங்களாகின. 21.24 கோடி ரூபாய் செலவானது. புவனேஸ்வரி சிலையின் வடிவம் மற்றும் ஆபரணங்கள் ஹொய்சள பாணியில் உள்ளது. சிலை கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
உருவச்சிலையை சுற்றிலும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. புவனேஸ்வரி உருவச்சிலையை காண, பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது. இதற்கென்றே மேற்கு பகுதிக்கு தனி கேட் வசதி செய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலை வரை பார்வையிடலாம்.
புவனேஸ்வரி சிலை திறப்பு விழாவை முன்னிட்டு, கலைக்குழுக்களின் ஊர்வலம் நடத்தப்படுகிறது. இன்று மாநிலம் முழுதும், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
கன்னட போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும். கோரிக்கை விடுத்தால் கன்னட போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற, அரசு தயாராக உள்ளது.
- சித்தராமையா, முதல்வர்

