பிரம்மபுத்ரா நதியில் மிகப்பெரிய அணையா? சீனா திட்டத்திற்கு இந்தியாவின் பதில் என்ன
பிரம்மபுத்ரா நதியில் மிகப்பெரிய அணையா? சீனா திட்டத்திற்கு இந்தியாவின் பதில் என்ன
ADDED : ஜன 03, 2025 09:58 PM

புதுடில்லி: பிரம்மபுத்ரா நதியில் மிகப்பெரிய அணை கட்டும் சீனாவின் திட்டம் தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ' இந்தியாவின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அத்திட்டத்தை உன்னிப்பாக கண்காணிப்போம்' எனக்கூறியுள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில், யார்லாங் சாங்போ நதியில், பிரமாண்டமான அணையைக் கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. நான்கு ஆண்டுகளாக இழுபறியில் இருந்த திட்டத்தை தற்போது செயல்படுத்த அந்த நாடு முடிவு செய்துள்ளது. உலகின் மிக பிரமாண்டமான நீர்மின் உற்பத்தி செய்யும் அணையாக இது விளங்கும் என கூறப்படுகிறது. இந்த நதி, திபெத்தில் இருந்து நம் நாட்டின் அருணாச்சல பிரதேசம், அசாம் மாநிலங்கள் வழியாக வங்கதேசத்துக்குள் பாய்கிறது. இங்கு, பிரம்மபுத்ரா என அது அழைக்கப்படுகிறது.
இமயமலையில் உள்ள மிகப்பெரிய பள்ளத்தாக்கில் அணை கட்டப்படுவதால் இந்தியா மற்றும் வங்கதேசம் கவலையடைந்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில், பிரம்மபுத்ரா மீது நம் நாடும் புதிய அணையை கட்டி வருவதால், சீனாவின் இந்த முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய அணையால், நம் நாட்டிற்கு வரும் ஆற்றின் நீர் கட்டுப்படுத்தப்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.இது மட்டுமின்றி, கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாக, எதிர்காலத்தில் அணையை சீனா திறக்க நேரிட்டால், இந்திய எல்லையில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இது தொடர்பாக டில்லியில் நிருபர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அணை கட்டுவது தொடர்பான விவகாரம், வெளிப்படைத்தன்மை மற்றும் நதி பாயும் நாடுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.
பிரம்மபுத்ரா நதி பாயும் நாடுகளின் நலன்கள் பாதிக்கப்படாமல் உறுதி இருப்பதை செய்ய வேண்டும் என சீனாவிடம் வலியுறுத்தி உள்ளோம். இந்தியாவின் நலன்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுப்பதுடன், அத்திட்டத்தை உன்னிப்பாக கண்காணிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்க முடியாது
இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் சில பகுதிகள் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதனை அந்நாடு தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடி வருகிறது. இதனருகே ஹோட்டன் என்ற பகுதி உள்ளது. இங்கு லடாக்கில் ஆக்கிரமித்த பகுதிகளுடன் சேர்த்து இரண்டு மாகாணங்களை சீனா உருவாக்கி உள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: சீனாவின் ஹோட்டன் பகுதியில் இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படுவதாக நாங்கள் அறிந்தோம். அவற்றில், இந்தியாவின் லடாக் பிராந்தியத்தின் சில பகுதிகளும் அடங்கியுள்ளன. அந்தப் பகுதியில் சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. புதிய மாகாணங்களை உருவாக்குவது நீண்ட காலமாக அந்தப் பகுதியில் இருந்து வரும் சீனாவின் சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.