இந்திய-அமெரிக்க இடையே மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
இந்திய-அமெரிக்க இடையே மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
ADDED : அக் 09, 2024 11:16 PM

புதுடில்லி: அமெரிக்காவிடம் ட்ரோன்கள் வாங்குவதற்காக இந்தியா- அமெரிக்கா இடையே 3.1 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது, இந்திய- அமெரிக்கா இடையே ராணுவ ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக அமெரிக்காவிடமிருந்து 3.1 பில்லியன் டாலர் மதிப்பில் 31 எம்.க்யூ.9பி ரக ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாங்குவது, நவீன ஏவுகணைகள், தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் வாங்கிட ராணுவ ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் , இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்தது. இதையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு தொடர்பாக அமைச்சரவை குழு இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் மூலம் இந்தியா -அமெரிக்க இடையே மிகப்பரெிய ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மொத்தம் 31 ட்ரோன்களில் 15 ட்ரோன்கள் இந்திய கடற்படைக்கும், 8 ட்ரோன்கள் ராணுவத்திற்கும், 8 ட்ரோன்கள் விமானப் படைக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ட்ரோன்களை இந்தியா என்ன செய்யும்?
*இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு மற்றும் உளவு பார்க்கும் திறன் கொண்டவை எதிரி இலக்குகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளை வீசும் திறன் கொண்டவை.
நீண்ட தூரம் பறந்து உளவுத் தகவல் சேகரிப்பு மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ளும் திறன் கொண்டது. மனிதாபிமான உதவி, பேரிடர் நிவாரணம், தேடுதல் மற்றும் மீட்பு, வான்வழி முன்னறிவிப்பு, மின்னணு போர், மேற்பரப்பு எதிர்ப்பு போர் மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஆகியவற்றிலும் பயன்படுத்தலாம்.
* அதுதவிர போதைப் பொருள் கடத்தல், கடற்கொள்ளையர் பிரச்னை போன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கவும் இந்த ட்ரோன்களை பயன்படுத்தலாம்.
இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்புத் திறனை அதிகரிக்கவும், அச்சுறுத்தல்களை மிகவும் திறம்படக் எதிர்கொள்ளவும், குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்காணிக்கவும் பயன்படும்.