பீடி - பீஹார் சர்ச்சை... கேரள காங்கிரஸ் நிர்வாகி பதவி ராஜினாமா
பீடி - பீஹார் சர்ச்சை... கேரள காங்கிரஸ் நிர்வாகி பதவி ராஜினாமா
ADDED : செப் 06, 2025 07:45 PM

திருவனந்தபுரம்: பீடி மற்றும் பீஹாரை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையான நிலையில், கேரள காங்கிரஸ் ஐடி பிரிவு தலைவர் பல்ராம் பதவியை ராஜினாமா செய்தார்.
அண்மையில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதைப் போல, புகையிலைப் பொருளான பீடி மீதான ஜிஎஸ்டி வரியும் 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
இந்த பீடி வரி குறைப்பையும், பீஹாரையும் தொடர்புபடுத்தி, கேரள காங்கிரஸ், அதன் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை போட்டது.
'ஆங்கிலத்தில் பி என்று ஆரம்பிக்கும் பீடியையும், பீஹாரையும் இனி பாவம் என்று கருத முடியாது,' எனக்கூறி கேரள மாநில காங்கிரஸ் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பதிவு சர்ச்சையான நிலையில், பாஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். பீடி தயாரிக்கும் மாநிலங்களில் ஒன்றாக திகழும் பீஹாரையும், அம்மாநில மக்களையும் காங்கிரஸ் அவமதித்து விட்டதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
இதையடுத்து, அந்தப் பதிவை காங்கிரஸ் கட்சி நீக்கியது. மேலும், தேர்தலுக்கான பிரதமர் நடத்தும் நாடகம் என்பதை விளக்கவே இதுபோன்ற பதிவை போட்டதாகவும், மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்ளதாகவும் கேரள காங்கிரஸ் தெரிவித்திருந்தது.
பீஹாரில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கேரள காங்கிரஸ் கட்சியின் இந்த செயல், ஆர்ஜேடி காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகாகத்பந்தன் கூட்டணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரள காங்கிரஸ் சமூக வலைதளப் பிரிவின் தலைவர் விடி பல்ராம் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.