நட்டநடு வயலில் ஒரு தொங்கல் பாலம்...! 'ஜீனியஸ்' அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் கலெக்டர்
நட்டநடு வயலில் ஒரு தொங்கல் பாலம்...! 'ஜீனியஸ்' அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் கலெக்டர்
ADDED : ஆக 07, 2024 09:31 AM

பாட்னா; பீகார் மாநிலத்தில் வயலின் நடுவில் 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் இன்றி பாலத்தை மட்டுமே அதிகாரிகள் கட்டிய வினோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
கிராம சாலைகள் திட்டம்
வடமாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தான் இப்படிப்பட்ட கூத்து நிகழ்ந்திருக்கிறது. ராணிகஞ்ச் என்ற ஊரில் 2.5 கி.மீ., தொலைவுக்கு பரமாந்தபூர் கிராம் வரை முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கான நிலம் ஆர்ஜிதம் முழுமை பெறவில்லை.
நடுவயலில் அரைகுறை பாலம்
அதற்கு முன்பாகவே பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கின்றன. பாலத்தின் நடுப்பகுதி மட்டுமே கட்டப்பட, அதன் இருபுறமும் இருக்க வேண்டிய இணைப்பு சாலைகள் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அதிகாரிகள் பாலத்தை கட்டிவிட்டு, மற்ற பகுதிகளில் பணிகளை முடிக்காமல் உள்ளனர் என்று ஊர் மக்கள் குரல் எழுப்ப அதன் பின்னரே விஷயம் வெளியில் வர ஆரம்பித்து இருக்கிறது.
நிலம் கையகப்படுத்துதல்
இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளில் சிலர் கூறி உள்ளதாவது; நிலம் கையகப்படுத்துதல் முழுமை அடைந்த பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
குழப்பம்
விவசாயி க்ரித்யானந்த் மண்டல் என்பவர் கூறுகையில், இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. வேறு ஏதேனும் பெரிய திட்டத்துக்காக கட்டுமானப் பணிகள் நடப்பவதாக தான் நாங்கள் நினைத்தோம். ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பம் நிலவியதால் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம் என்றனர்.
அறிக்கை
விவசாயிகளின் தகவலை அடுத்து அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதோடு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டு உள்ளார்.