பீஹார் துணை முதல்வருக்கு இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது எப்படி; தேஜஸ்வி யாதவ் கேள்வி
பீஹார் துணை முதல்வருக்கு இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது எப்படி; தேஜஸ்வி யாதவ் கேள்வி
ADDED : ஆக 10, 2025 02:58 PM

பாட்னா: பீஹார் துணை முதல்வருக்கு இரண்டு வாக்காளர் அட்டை இருப்பது எப்படி என்று தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் பீஹாரில், அண்மையில் வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர்.
இந்த வாக்காளர் பட்டியலில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இதற்கு பதிலடியாக தேஜஸ்வி யாதவ் பெயர் உள்ளதை வாக்கு பதிவு மையம், வரிசை எண்ணுடன் தேர்தல் ஆணையம் விளக்கி கூறியது. மேலும் அவருக்கு 2 வாக்காளர் அட்டைகள் உள்ளது, அவற்றில் ஒன்று போலியாக இருக்கலாம் என்று கூறி அவருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசும் அனுப்பியது.
இந்நிலையில், பீஹாரின் தற்போதைய துணை முதல்வர் விஜய் சின்ஹாவுக்கு புகைப்படத்துடன் கூடிய 2 வாக்காளர் அட்டைகள் உள்ளன என்று தேஜஸ்வி யாதவ் கூறி உள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் பேசுகையில் கூறியதாவது; தேர்தல் ஆணையத்தின் ஆன்லைனில் விஜயகுமார் சின்ஹா இரு இடங்களில் ஓட்டு இருப்பது தெரிகிறது. ஒரு இடத்தில் அவரின் வயது 57 என்றும், மற்றொரு இடத்தில் அவரது வயது 60 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இரு ஓட்டுகளும் வேறு,வேறு தொகுதிகளில் இருக்கிறது.
புதிய வாக்காளர் பட்டியல் அனைத்துக் கட்சிகளின் மாவட்ட தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. யார் இந்த முறைகேட்டை செய்வது? மக்களுக்கு இது தெரிந்தாக வேண்டும். இந்த தவறு 2 வழிகளில் நடந்திருக்க வேண்டும். ஒன்று தேர்தல் ஆணையத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் மோசடியானதாக இருக்க வேண்டும் அல்லது பீஹார் துணை முதல்வர் மோசடி நபராக இருக்க வேண்டும்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் கூறினார்.
அவரின் குற்றச்சாட்டுக்கு விஜய் சின்ஹா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், 2 இடங்களில் உள்ள வாக்கில், ஒன்றை நீக்கிவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. நான் ஒரு ஓட்டை மட்டுமே பயன்படுத்தி வாக்களிக்கிறேன் என்றார்.