பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
பீஹார் தேர்தல் முடிவு; தமிழக தலைவர்களுக்கு பாடம்!
UPDATED : நவ 14, 2025 12:47 PM
ADDED : நவ 14, 2025 11:38 AM

நமது நிருபர்
ஓட்டுத்திருட்டு புகார்களை மட்டுமே சொல்லி மக்களது ஓட்டுக்களை பெற்று விடலாம் என்ற இண்டி கூட்டணி கட்சிகளின் திட்டத்தை பீஹார் மக்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்துள்ளனர். இது, தமிழக அரசியல் கட்சித்தலைவர்களுக்கான பாடம் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.
பீஹார் மாநில தேர்தல் பிரசாரத்தில், வேறு எந்த விவகாரத்தையும் விட ஓட்டுத்திருட்டு பிரசாரத்தையே இண்டி கூட்டணி கட்சிகள் அதிகம் பேசின. காங்கிரஸ் தலைவர் ராகுல், லாலு மகன் தேஜஸ்வி இருவரும் ஊர் ஊராக பேரணி சென்றனர். செல்லும் இடங்களில் எல்லாம், ஓட்டுத்திருட்டு பற்றியே பேசிப் பேசி வாக்காளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தினர்.
உண்மையில் ஓட்டுத்திருட்டு என்ற ஒன்று கிடையவே கிடையாது என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியும் அதை அவர்கள் ஏற்கவில்லை. இறந்து போன வாக்காளர்கள், இரட்டைப்பதிவு இருக்கும் வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள் பெயர்கள் மட்டுமே வாக்காளர்கள் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையால் நீக்கப்பட்டனர்.
இதைத்தான் ஓட்டுத்திருட்டு என்று கூப்பாடு போட்டு இண்டி கூட்டணி ஒப்பாரி வைத்தது. இதை, பீஹார் மாநில மக்கள் முற்றிலும் புறக்கணித்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
இந்த முடிவுகள், அதே போன்ற ஓட்டுத்திருட்டு பிரசார அரசியலை கையில் எடுக்கும் திமுக கூட்டணிக் கட்சிகள் கவனிக்க வேண்டிய ஒன்றாகும் என்கின்றனர், அரசியல் ஆய்வாளர்கள்.பிற மாநிலங்களில் செய்வதை போலவே, தமிழகத்திலும் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்து விடுவார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலினும், கூட்டணி கட்சிகளும் பேசத் தொடங்கியுள்ளனர். சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அபாண்டமாக பேசியவர்களுக்கு பீஹார் மாநில வாக்காளர்கள் அளித்திருக்கும் முடிவு, நிச்சயம் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் தான் என்கின்றனர், அரசியல் பிரமுகர்கள்.

